அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை மக்கள் கொண்டாட்டம்
அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை மக்கள் கொண்டாட்டம்
UPDATED : ஜன 23, 2024 02:45 AM
ADDED : ஜன 21, 2024 11:49 PM

அயோத்தி,: உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களின் பல நுாற்றாண்டு கால கனவு இன்று நிறைவேறியது. பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் ராம சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்து பிராண பிரதிஷ்டை செய்தார். பிராண என்றால் உயிர் கொடுத்தல், மூச்சு வழங்கல் என அர்த்தம் கொள்ளலாம்.
கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சகட்ட சம்பிரதாயம் இது.
பகல் 12:30 மணி முதல் 12 40 மணி வரை பிராண பிரதிஷ்டை நடந்தது.
ஐந்து நுாற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் ராமர் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாட, நாட்டு மக்கள் அனைவரும் இன்று மாலை வீடுகளுக்கு முன் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இரு பிரிவினர் இடையே நிலவிய மோதலும் கசப்பும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் முடிவுக்கு வந்து, அதே சூட்டுடன் கோவில் கட்டுமான பணியும் துவங்கியதால் நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
பணி முடிந்து கோவில் திறக்கப்படுவதால் மக்களிடம் உற்சாகம் பொங்குகிறது. எங்கு பார்த்தாலும், ராமர் குறித்தும், அயோத்தி கோவில் குறித்தும் பேசப்படுகிறது.
பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் , உபி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் பட்டர்கள் சிலர் மட்டும் இருந்தனர்.
விழாவில் பங்கேற்க ஹிந்து மத தலைவர்கள், ஜீயர்கள், சன்னியாசிகள், பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். இன்று மட்டும் அழைப்பாளர்கள் தவிர எவரும் கோவிலை நெருங்க முடியாது. நாளை முதல் பொதுமக்கள் போகலாம்.
மத வேறுபாடு பாராமல் அயோத்தியில் உள்ள அனைவரும் குதுாகலமாக வீடு, கடைகள் வீதிகளை அலங்கரிக்கின்றனர். சர்வதேச தரத்திலான விமான நிலையம், நவீன வசதிகள்கொண்ட ரயில்வே ஸ்டேஷன், மிக அகலமான சாலைகள் என ராமரின் நகரம் ஒட்டுமொத்தமாக பதுப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கு பார்த்தாலும், வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் மற்றும் கோவிலின் பதாகைகள், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. நகரம் முழுதும் காவி கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகளில் ராம சங்கீர்த்தனங்கள், ராம நாமங்கள் ஒலிக்கின்றன. மிகுந்த மகிழ்ச்சியுடனும், உணர்வு பெருக்குடனும் குவிந்துள்ள மக்கள், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுகின்றனர்.
தினமலரில் நேரடி ஒளிபரப்பு
உலகெங்கும் வாழும் ஹிந்துக்கள் அயோத்தி கும்பாபிஷேகத்தை இன்னொரு தீபாவளியாக கொண்டாட தயாராகி விட்டனர். அவர்களுக்காக சர்வதேச சேனல்களிலும் இணையவழியிலும் விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது. தூர்தர்ஷன் எல்லா மொழிகளிலும் நேரடி வர்னனையுடன் ஒளிபரப்புகிறது. தினமலர் இணையதளத்திலும் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
எது சனாதன தர்மம்?
சனாதன தர்மம் குறித்த புரிதல் இல்லாதவர்களே அதை எதிர்க்கின்றனர். சனாதனம் என்பது மதமோ, வழிபாட்டு முறையோ அல்ல. அது வாழ்வின் நடைமுறை.அறிவியலை நீங்கள் நம்பாவிட்டாலும், அறிவியல்கோட்பாடுகள் உள்ளன. அதுபோலவே, சனாதன தர்மக் கொள்கைகளும் நித்தியமானவை.
-கோவிந்த் தேவ் கிரி
பொருளாளர், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை
கருவறையை அலங்கரிக்கும் சென்னை மலர்கள்
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் அலங்காரம் செய்யப்பட்ட மலர்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவிலின் மலர்கள் அலங்கார குழு தலைவர் சஞ்சய் தவாலிகார் கூறுகையில், ''ராமர் கோவில் முழுவதையும் 3,000 கிலோ எடையிலான, 20க்கும் மேற்பட்ட மலர் வகைகளால் அலங்கரித்துஉள்ளோம்.''இதற்காக, நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலர்களை வரவழைத்து உள்ளோம். சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிக நறுமணம் வீசக்கூடிய மலர்களை கொண்டு, கோவில் கருவறையை அலங்கரித்துள்ளோம்,'' என்றார்.