ஆன்லைன் சூதாட்ட மோசடியில் பிரபலங்களின் சொத்து முடக்கம்?
ஆன்லைன் சூதாட்ட மோசடியில் பிரபலங்களின் சொத்து முடக்கம்?
UPDATED : செப் 29, 2025 06:20 AM
ADDED : செப் 29, 2025 12:04 AM

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு தளத்தில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் சிலரின் பல கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை விரைவில் முடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் தொடர்பான நிறுவனம் '1எக்ஸ்பெட்'. இது ஐரோப்பிய நாடான குரசோவாவில் பதிவு செய்யப்பட்டு, இந்தியாவிலும் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் பல்வேறு விளையாட்டுக்களில் பந்தயம் கட்ட அனுமதிக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டு அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அந்த நிறுவனத்துக்கு பிரபலங்கள் சிலர் விளம்பரம் செய்து அதற்கு கட்டணம் பெற்றனர். கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஷிகர் தவான்; நடிகர்கள் சோனு சூட், மிமி சக்ரவர்த்தி, அங்குஷ் ஹஸ்ரா மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் பலரை அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரித்தது.
விசாரணையில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் சிலர் பந்தய நிறுவனம் அளித்த பணத்தை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை பணமோசடி மூலம் வந்த வருமானம் என அமலாக்கத் துறை கூறுகிறது.
அந்த சொத்துக்களை அமலாக்கத்துறை மதிப்பீடு செய்து வருகிறது. அவை தற்காலிகமாக முடக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் பறிமுதல் செய் யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.