பீஹாருக்கு பல பணிகளை செய்து வரும் மத்திய அரசு: நிதீஷ் குமார் பெருமிதம்
பீஹாருக்கு பல பணிகளை செய்து வரும் மத்திய அரசு: நிதீஷ் குமார் பெருமிதம்
ADDED : ஏப் 07, 2024 02:27 PM

பாட்னா: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பீஹாருக்காக பல பணிகளை செய்து வருகிறது என அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறினார்.
பீஹார் மாநிலம் நவாடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதீஷ் குமார் பேசியதாவது: பீஹார் மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2005க்கு முன் பீஹார் மாநிலத்தின் நிலை என்ன?. மாலைக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வர முடியாது. கணவனும் மனைவியும் (லாலு யாதவ் மற்றும் ராப்ரி தேவி) 15 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் எந்த வேலையும் நடக்கவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பீஹாருக்காக பல பணிகளை செய்து வருகிறது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். முன்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்தன. தற்போது பா.ஜ., கூட்டணி ஆட்சியில் சண்டையே இல்லை. நாங்கள் இரவு பகலாக உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.,வினர் கடவுளாக மாற முயற்சி
இது குறித்து, பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: முதல்வர் கூறியதில் ஏதாவது புதிய தகவல் உள்ளதா?. எங்களுடன் கூட்டணியில் இருந்தபோது, பா.ஜ., குறித்து பல விஷயங்களைச் சொன்னார். பீஹாரில் பல்வேறு இடங்களில் ஏன் பிரசாரம் செய்து அலைகிறார்கள்.
சனாதன தர்மத்தை அழிப்போம் என நாங்கள் பேசி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். எங்கள் வீட்டில் கோவில் உள்ளது, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். பா.ஜ.,வினர் கடவுளாக மாற முயற்சிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

