சிரியாவில் தீவிரமடையும் உள்நாட்டு போர் இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுரை
சிரியாவில் தீவிரமடையும் உள்நாட்டு போர் இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுரை
ADDED : டிச 07, 2024 11:58 PM
புதுடில்லி: சிரியாவில், கிளர்ச்சிப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில், கடந்த 2011- முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், அதிபர் பஷார் அல்- ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சிப் படை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த மாத இறுதியில் சிரியாவின் அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் வெளியேறியதால், அந்நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
இந்நிலையில், அந்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கிளர்ச்சிப் படையினர் சுற்றிவளைத்தனர்.
இதைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சி படையினர் நேற்று இரவு நெருங்கினர். இதையடுத்து, சிரியாவில் உள்ள இந்தியர்களை உடனே வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியர்கள் சிரியாவை விட்டு விமானங்களின் வாயிலாக விரைவாக வெளியேறுவது நல்லது. வெளியேற முடியாதவர்கள், அந்நாட்டிலேயே பாதுகாப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்.
டமாஸ்கசில் உள்ள இந்திய துாதரகத்தை, +963 99338 5973 என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இது, வாட்ஸாப் எண்ணாகவும் இயங்கும்.
இதேபோல், hoc.damascus@mea.gov.in என்ற இ - மெயில் முகவரி வாயிலாகவும் இந்திய துாதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். தற்போது நிலவும் சூழலில், மறுஅறிவிப்பு வரும் வரை சிரியாவுக்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததையடுத்து, தற்போது 90 இந்தியர்கள் மட்டுமே அங்கு வசித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களில், 14 பேர் ஐ.நா., அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.