ADDED : அக் 25, 2024 08:57 PM

புதுடில்லி:காற்று மாசு அதிகரித்து வருவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சக இயக்குனர் டாக்டர் அதுல் கோயல், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
நாடு முழுதும் பரவலாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மரக்கட்டை, கழிவுப் பொருட்களை எரிப்பதைத் தடுக்க வேண்டும். பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்தை அதிகளவில் மக்கள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். டீசல் ஜெனரேட்டர் உபயோகத்தைக் கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக நெரிசலான பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காற்று மாசு அதிகரிப்பால் சுவாசக் கோளாறு, இதயம் மற்றும் பெருமூளை பாதிப்பு ஏற்பட வாய்புள்ளது. குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் வெளிநடமாட்டத்தை தவிர்க்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். மாநில சுகாதாரத் துறைகள் காற்று மாசு குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களில் செல்வதை தவிர்த்து, பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.