சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிதி
சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிதி
ADDED : டிச 05, 2024 07:20 AM

பெங்களூரு: கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா மற்றும் புண்ணிய தலமாக விளங்கும் சவதத்தி எல்லம்மா கோவில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
பெலகாவி மாவட்டம், சவதத்தியில் உள்ள எல்லம்மா கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும், கோடிக்கணக்கான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியுள்ளது.
பக்தர்கள், சுற்றுலா பயணியருக்கு தங்கும் விடுதி உட்பட, மற்ற வசதிகளை செய்ய 100 கோடி ரூபாய் தேவைப்பட்டது. மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், நடப்பாண்டு செப்டம்பர் 1ம் தேதி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, சவதத்தி எல்லம்மா கோவில் மேம்பாட்டுக்கு 100 கோடி ரூபாய், பெங்களூரின் ரோவித் மற்றும் தேவிகாராணி எஸ்டேட் வளர்ச்சிக்கு, 99.17 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக, நேற்று அறிவித்துள்ளது. இதற்கு அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டி:
நாட்டிலேயே 'கேரண்டி அரசு' என, பெயர் பெற்றுள்ள, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையிலான அரசு, தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிபடி, ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக 'சக்தி' திட்டம், பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதன் பயனாக தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் சவதத்தி எல்லம்மா கோவிலின் வளர்ச்சிக்கு, நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசிடம் கோரினோம். இதை ஏற்று, மத்திய அரசு நிதியுதவி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.