மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு நெறிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு நெறிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு
ADDED : நவ 24, 2024 11:32 PM

புதுடில்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு சீரான இடஒதுக்கீடு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன், வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஒரு வழக்கை, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது.
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்துக்கு உட்பட்டு, அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வாய்ப்பு தரப்படுவதில்லை என்று கண்டனம் தெரிவித்தது.
இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்து அரசு துறைகளுக்கும் பொதுவான நெறிமுறைகளை உருவாக்கும்படியும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்துக்கு உட்பட்டு, இந்த நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையாக கிடைப்பதை அனைத்துத் துறைகளும் உறுதிசெய்ய வேண்டும்.
இதற்காக, ஒவ்வொரு துறையிலும், எந்தெந்த பணியிடங்களை வழங்கலாம் என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அதில், மாற்றுத்திறனாளிகளும் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் பணியிடங்கள் குறித்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், அந்தப் பணியிடங்களிலும், பதவி உயர்விலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பார்வையற்றோர், காது கேளாதோர் என, பல வகையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு, நேரடி பணி நியமனங்களில், 4 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் பிரிவினருக்காக ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான விளம்பரங்களையும் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க முடியாது என்ற நிலை இருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதை மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.