வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கொலை யூனுஸ் அரசுக்கு மத்திய அரசு கண்டனம்
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கொலை யூனுஸ் அரசுக்கு மத்திய அரசு கண்டனம்
ADDED : ஏப் 20, 2025 01:32 AM
புதுடில்லி: வங்கதேசத்தில், ஹிந்து மத தலைவரை கடத்திச் சென்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, 2024 ஆகஸ்டில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், அந்நாட்டில் இடைக்கால அரசு பதவியேற்றது. அதன்பின், ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்; சொத்துகள் சூறையாடப்படுகின்றன.
சமீபத்தில், மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் வக்ப் திருத்த சட்டம் தொடர்பான போராட்டத்தில் நடந்த வன்முறை குறித்து, யூனுஸ் அரசு சர்ச்சை கருத்து தெரிவித்தது. இதற்கு, 'உங்கள் நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரை பாதுகாக்கும் வழிகளை முதலில் கவனியுங்கள்' என, மத்திய அரசு பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், வங்கதேசத்தின் தினாஜ்புர் மாவட்டத்தின் பாசுதேப்புரைச் சேர்ந்த பாபேஷ் சந்திர ராய், 58, என்ற ஹிந்து தலைவர் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
'வங்கதேச பூஜா உத்ஜாபன் பரிஷத்' அமைப்பின் பிராந்திய தலைவரான அவரை, வீட்டில் இருந்து மர்ம நபர்கள் பைக்கில் கடத்தி, நக்சல்பாரி கிராமத்துக்கு கொண்டு சென்று சரமாரியாக அடித்துக் கொன்றனர். பாபேஷின் உடலை அவரது வீட்டில் வீசி சென்றனர்.
இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து, நம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் பாபேஷ் சந்திர ராய் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது; வேதனை அளிக்கிறது. இந்த கொலையானது, வங்கதேச இடைக்கால அரசின் கீழ், ஹிந்து சிறுபான்மையினர் திட்டமிட்டு துன்புறுத்தப்படும் கொடுமைகளின் தொடர்ச்சி.
ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இனியாவது சாக்குப்போக்குகளை கூறாமல், ஹிந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை, யூனுஸ் அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.