மணிப்பூரில் 'கோப்ரா' படையை களமிறக்கியது மத்திய அரசு
மணிப்பூரில் 'கோப்ரா' படையை களமிறக்கியது மத்திய அரசு
ADDED : ஜூன் 01, 2026 06:21 AM

இம்பால்: நக்சல் ஒழிப்பு மற்றும் வனப்பகுதி தாக்குதல்களில் அதிவேகமாக செயல்படும், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 'கோப்ரா' சிறப்பு படையை, முதன்முறையாக மணிப்பூரில் மத்திய அரசு களமிறக்கி உள்ளது.
'கோப்ரா' என்பது, 2008-ல் தொடங்கப்பட்ட நாட்டின் முதன்மை கொரில்லா எதிர்ப்பு படையாகும். அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் எதிரிகளை, உளவுத் துறை தகவல்களின்படி துல்லியமாக தாக்கி அழிப்பதில் இந்த படையினர் வல்லவர்கள். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா போன்ற மாநிலங்களில் இயங்கி வந்த நக்சல்களை, 'கோப்ரா' படையே பெருமளவு ஒடுக்கியது.
கடந்த 2023 முதல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பதற்ற நிலை நீடிக்கிறது. மெய்டி - கூகி பழங்குடியினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக, வெடித்த கலவரமே இதற்கு காரணம். தற்போது வன்முறைகள் குறைந்திருந்தாலும், மலை கிராமங்கள் மற்றும் காட்டுப் பகுதிகளில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன.
போலீசாரால் கையாள முடியாத இத்தகைய சவாலான நிலப்பரப்புகளில், கோப்ரா படையினரின் வியூகம், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட பெரிதும் உதவும் என, மத்திய அரசு நம்புகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து, தலா ஒரு கோப்ரா படைப்பிரிவு மணிப்பூருக்கு விரைந்துள்ளன. அங்கு நிலவும் அசாதாரண சூழலை இந்த படை கட்டுப்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
