மத்திய அரசு ஊக்கத்தொகை திட்டத்தால் 3.50 கோடி இளைஞர்களுக்கு வேலை
மத்திய அரசு ஊக்கத்தொகை திட்டத்தால் 3.50 கோடி இளைஞர்களுக்கு வேலை
ADDED : ஜூலை 06, 2025 01:23 AM

சென்னை: ''வேலைவாய்ப்புடன்இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தால், 3 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்,'' என, வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் விஜய்ஆனந்த் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதனால், 3 கோடியே, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு, 99,446 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு, இத்திட்டம் பொருந்தும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், முதல் முறையாக பணியில் இணைந்து, வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு, 15,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
இத்தொகை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனால், அமைப்புசாரா தொழில் துறைகளில் உள்ளவர்கள், தொழில் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவர்.
வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கப்படும். 1 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக மாதம், 3000 ரூபாய் வரை, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இது, அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, நான்காம் ஆண்டு வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தை தகுதியான அனைவரும், முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதன்முதலில் வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு, இத்திட்டம் பயனளிப்பதுடன்,நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும். தமிழகத்தில் தற்போது, 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் அருண்குமார் உடனிருந்தார்.