விமானிகளுக்கு ஓய்வு அளிப்பதில் விதிமீறல் 'ஏர் இந்தியா'வுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
விமானிகளுக்கு ஓய்வு அளிப்பதில் விதிமீறல் 'ஏர் இந்தியா'வுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
UPDATED : ஜூலை 25, 2025 03:55 PM
ADDED : ஜூலை 25, 2025 01:00 AM
புதுடில்லி: விமானிகளுக்கான ஓய்வு, பணி வழங்குதல், விமான சிப்பந்திகளுக்கான பயிற்சிகள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளில் விதிமீறல் நடந்திருப்பதாக கூறி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விமானிகளுக்கு வழங்கப்படும் பணி, ஓய்வுக்காலம், விடுப்பு ஆகியவை குறித்த தகவல்களை விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு, விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
அந்த வகையில் கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை, விமானிகளின் பணி, ஓய்வு ஆகியவை குறித்து, 'ஏர் இந்தியா' நிறுவனம் தாமாகவே முன் வந்து அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இதை பரிசீலித்த விமான போக்குவரத்து இயக்குநரகம், ஓய்வு மற்றும் பணி வழங்குவதில் சில விதிகளை மீறியிருப்பதாக, 'ஏர் இந்தியா'வுக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன் ஏப்., 27, 28 மற்றும் மே 2ம் தேதிகளிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, 'ஏர் இந்தியா' செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'எங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு விரைவில் உரிய பதில் அளிக்கப்படும். விமான சிப்பந்திகள் மற்றும் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏர் இந்தியா நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது' என்றார்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 'ஏர் இந்தியா'வுக்கு 13 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவற்றில் பெரும்பாலான நோட்டீஸ்கள் விதிமீறல் மற்றும் சிறிய விபத்துகள் தொடர்பானவை.
கடந்த செவ்வாய் அன்று ஹாங்காங்கில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் டில்லியில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்தது. உடனடியாக அணைக்கப்பட்டதால், காயங்கள் ஏதுமின்றி பயணியர் உயிர் தப்பினர்.
அதே போல், மும்பையில், ஓடுபாதையை விட்டு விலகி விமானம் வழுக்கிச் சென்றது. இதில் இன்ஜின் பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது.
டில்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானத்தின் வேக அளவை காட்டும் 'டிஸ்பிளே' பழுதானதால், 'டேக் - ஆப்' ஆகும் கடைசி தருணத்தில் விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது.
ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின், 'ஏர் இந்தியா' விமானங்கள் இப்படி அடுத்தடுத்து சிறிய விபத்துகளை சந்தித்து வருவதால், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பி, தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறது.