வேறுபட்ட கட்டண நிர்ணயம்: உபெர், ஓலாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
வேறுபட்ட கட்டண நிர்ணயம்: உபெர், ஓலாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
UPDATED : ஜன 23, 2025 04:42 PM
ADDED : ஜன 23, 2025 03:51 PM

புதுடில்லி: சவாரி செய்வதற்கு முன்பதிவு செய்யும்போது, ஆண்டிராய்டு போன்களில் ஒரு கட்டணமும், ஐபோன்களில் ஒரு கட்டணமும் நிர்ணயம் செய்தது தொடர்பாக, உபெர், ஓலா நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
டாக்ஸி ஓருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபெர் மற்றும் ஓலா நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்த புகார்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இது குறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வாடிக்கையாளர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த நிறுவனங்களின் கட்டண அறிக்கைகள் தொடர்பாக, உபெர், ஓலா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, அமைச்சகம் இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

