வேலையை காட்டும் வெங்காயம்; அதிரடி ஆக்சனில் மத்திய அரசு!
வேலையை காட்டும் வெங்காயம்; அதிரடி ஆக்சனில் மத்திய அரசு!
ADDED : நவ 13, 2024 07:11 AM

புதுடில்லி: விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், கையிருப்பில் இருக்கும் வெங்காயத்தை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
சமையலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் வெங்காயத்துக்கு எப்போதுமே மவுசு அதிகம். தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் சமையல்களின் ராஜா என்று வெங்காயத்துக்கு ஒரு பெயர் உண்டு. ஆனால், அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. தலைநகர் புதுடில்லியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.67 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 ஆகவும், மற்ற நகரங்களில் கிலோ ரூ.80 வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடக்கத்தில் மெல்ல, மெல்ல விலையேறிய வெங்காயத்தால் வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மொத்த கொள்முதல் என்று மட்டும் இல்லாமல் சில்லரை விற்பனையிலும் விலை உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறி உள்ளதாவது; பண்டிகை காலத்தை தொடர்ந்து தற்போது சில்லரை விற்பனையில் வெங்காயம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தற்காலிகமான ஒன்று. விலை மேலும் உயரக்கூடாது என்பதற்காக கையிருப்பில் இருக்கும் வெங்காயத்தை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
எங்கெல்லாம் விலை மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக ரயில், சாலை மார்க்கமாக வெங்காயம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் விளைவாக அடுத்து வரக்கூடிய ஒரு சில நாட்களில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

