தனிநபர் வாகனங்களுக்கு சுங்க கட்டண பாஸ் திட்டம் மத்திய அரசு ஆலோசனை
தனிநபர் வாகனங்களுக்கு சுங்க கட்டண பாஸ் திட்டம் மத்திய அரசு ஆலோசனை
ADDED : ஜன 17, 2025 01:59 AM

புதுடில்லி :தனிநபர் வாகனங்கள், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மாதாந்திர அல்லது ஆண்டு பாஸ்கள் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களில் 74 சதவீதம், வர்த்தக வாகனங்களால் கிடைக்கிறது. அதே நேரத்தில், தனிநபர் வாகனங்கள் வாயிலாக 26 சதவீதம் கிடைக்கிறது.
தனிநபர் வாகனங்களுக்கு மாதாந்திர அல்லது ஆண்டு பாஸ்கள் வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
இதன் வாயிலாக வசூல் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதும் தவிர்க்க முடியும். பாஸ்கள் வழங்குவதால், அரசுக்கு பெரிய அளவில் இழப்பும் ஏற்படாது.
நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது, 'பாஸ்டாக்' வாயிலாக செய்யப்பட்ட பின், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம், எட்டு நிமிடங்களில் இருந்து, 47 வினாடிகளாக குறைந்துள்ளது.
அடுத்த கட்டமாக, ஒரு வாகனம் நெடுஞ்சாலையில் இரண்டு சுங்கச் சாவடிகளுக்கு இடையே செல்லும்போது, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக, வாகனம் புறப்படும் இடத்தில் இருந்து அது சென்றடையும் இடம் வரைக்குமான கட்டணத்தை மட்டும் வசூலிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக, சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவதுடன், பயணிக்கும் துாரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.