பாதியில் நின்ற குடியிருப்பு திட்டங்களுக்கு கடன் உதவி அளிக்கிறது மத்திய அரசு
பாதியில் நின்ற குடியிருப்பு திட்டங்களுக்கு கடன் உதவி அளிக்கிறது மத்திய அரசு
ADDED : டிச 26, 2025 01:09 AM

புதுடில்லி: நிதி பற்றாக்குறையால் நின்று போன, 1 லட்சம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை முடிப்பதற்காக மத்திய அரசு, 'சுவாமி - 2' திட்டத்தின் கீழ், 15,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை விரைவில் துவங்க உள்ளது.
நகரத்தில் வசிக்கும் நடுத்தர மக்கள் பலர், தங்கள் வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை நம்பியுள்ளனர்.
நெருக்கடி
இதற்காக வங்கி கடன் வாங்கி முன்பணம் செலுத்திய பின் அடுக்குமாடி திட்டங்கள் பல நிதிப்பற்றாக்குறையால் நின்று போகின்றன. 'பிராப் ஈக்விட்டி' ஆய்வு நிறுவனம் 2019ல் வெளியிட்ட அறிக்கையில், 'நாடு முழுதும் சுமார் 1,500 திட்டங்களில், 4.58 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் நின்று போயுள்ளன. இவற்றை முடிக்க, 55,000 கோடி ரூபாய் நிதி தேவை' என, மதிப்பிட்டது.
கிடப்பில் உள்ள குடியிருப்பு திட்டங்களால் ஒருபுறம் வங்கிக் கடனுக்கான மாத தவணை, மறுபுறம் வீட்டு வாடகை என இரட்டை நெருக்கடிக்கு மக்கள் ஆளாகினர். அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 2019ல் 'சுவாமி - 1' எனப்படும், மலிவு மற்றும் நடுத்தர வருவாயினர் வீடுகளுக்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் நிதிப்பற்றாக்குறையில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி கட்டுமானத்தை கண்காணிக்கும். 'எஸ்.பி.ஐ., வென்சர்ஸ்' நிறுவனம் இத்திட்டத்தின் மேற்பார்வையாளராக செயல்படுகிறது.
முதல் கட்ட திட்டத்தில், 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. அடுத்த 3 - 4 ஆண்டுகளில் மேலும் 30,000 வீடுகளை ஒப்படைக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
மூலதனம்
முதல் கட்ட திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, 'சுவாமி - 2' திட்டத்தினை மத்திய அரசு விரைவில் துவங்க உள்ளது. இதற்காக, 15,000 கோடி ரூபாய் நிதி திரட் ட உள்ளனர். இந்த நிதி அரசு, வங்கிகள், தனியார் முதலீட்டாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் உருவாக்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ஏற்கனவே, 2025 - 26 பட்ஜெட்டில், 1,500 கோடி ரூபாய் ஆரம்பக்கட்ட மூலதனமாக ஒதுக்கியுள் ளது.

