பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மத்திய அரசு ‛‛ஷோகாஸ்'' நோட்டீஸ்
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மத்திய அரசு ‛‛ஷோகாஸ்'' நோட்டீஸ்
UPDATED : மே 24, 2024 06:49 PM
ADDED : மே 24, 2024 06:43 PM

புதுடில்லி: ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தது தொடர்பாக கர்நாடகா சிறப்பு விசாரணை குழுவால் தேடப்பட்டு வரும் ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மத்திய அரசு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது வீட்டில் பணியாற்றிய 47 வயதுள்ள பெண், ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தன்னை பலாத்காரம் செய்ததாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், ஏப்ரல் 28ம் தேதி புகார் அளித்திருந்தார்.
தந்தை, மகன் மீது பலாத்கார வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரணை செய்ததில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கர்நாடகா சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைந்து வழக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று (24.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கர்நாடகா அரசிடமிருந்து கடந்த 21-ம் தேதி அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடு சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.