ADDED : டிச 23, 2025 09:43 PM

புதுடில்லி: வங்கதேசத்துடனான உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. கடந்த ஒரு வாரத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது முதல் வங்கதேசம் - இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.
கடந்த 15 ம் தேதி டாக்காவில் நடந்த கூட்டம் ஒன்றில், நேஷனல் சிட்டிசன் கட்சி தலைவர் ஹஷ்நத் அப்துல்லா, 'இந்தியாவை பிரிவினைவாதிகளை கொண்டு துண்டாக்குவோம்' எனக்கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவுக்கான வங்கதேச தூதரை வரவழைத்து கண்டனம் தெரிவித்தது.
இதனிடையே வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால், இந்த போராட்டம் குறித்து வங்கதேச ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டன. இதனை வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. இருப்பினும், தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்த வங்கதேச அரசு, நமது நாட்டு தூதர் பிரனாய் வர்மாவை வரவழைத்து கண்டனம் தெரிவித்து இருந்தது.
மீண்டும் இந்திய தூதரை வரவழைத்த வங்கதேச அரசு, டில்லியில் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் எனக்கூறி கவலை தெரிவித்து இருந்தது.
இதனையடுத்து நமது நாட்டுக்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வங்கதேச தூதருக்கு சம்மன் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

