17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
ADDED : நவ 21, 2024 04:09 PM

புதுடில்லி: இணையவழிக் குற்றங்களில் ஈடுபட்ட, 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகளை, மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்த கணக்குகள் பல்வேறு நாடுகளில் இருந்து செயல்பட்டு இந்தியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் வகையில், உள்துறை அமைச்சகம் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சைபர் கிரிமினல் நடவடிக்கைகள், பெரும்பாலும் கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்த whatsapp கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்படுவது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் தளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட மோசடியாளர்களால் இந்த கணக்குகள் பயன்படுத்தப்பட்டன. இது டிஜிட்டல் மோசடிகளின் ஆபத்தான அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது.சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் புகார்களை மதிப்பாய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான கணக்குகளை அடையாளம் கண்டு, இந்த எண்களைத் தடுக்க வாட்ஸ் அப்.,க்கு அறிவுறுத்தியது.
பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக, சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து 'டிஜிட்டல் கைது' மோசடி நடைபெறுகிறது. இந்த மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் மத்திய புலனாய்வுப் பிரிவு, வருமான வரி அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகளின் முகவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் மிரட்டல் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். மேலும் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பெரும் தொகையைக் கேட்டு தொல்லை கொடுப்பார்கள்.
அதிகரித்து வரும் நிதி பாதிப்பு மற்றும் அரசு எச்சரிக்கைகள்
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் மூலம் மோசடி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 6 கோடி ரூபாய் திருடுவதாக சைபர் பிரிவின் ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. 2024ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், மொத்தமாக பறிக்கப்பட்ட தொகை வியக்கத்தக்க வகையில் ரூ.2,140 கோடியை எட்டியது. அக்டோபர் மாதத்திற்குள் டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பான 92,334 வழக்குகளை சைபர் பிரிவு கண்டிபிடித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.