கர்நாடகாவிடம் 2.50 லட்சம் டன் மாம்பழம் வாங்கும் மத்திய அரசு
கர்நாடகாவிடம் 2.50 லட்சம் டன் மாம்பழம் வாங்கும் மத்திய அரசு
ADDED : ஜூன் 23, 2025 03:05 AM

பெங்களூரு: கர்நாடகாவில், மாம்பழ விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்க, மத்திய அரசு, 2.50 லட்சம் டன் மாம்பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில், நடப்பாண்டு மாம்பழங்களின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க விவசாயிகள், 'மாம்பழங்களை அரசே வாங்கி கொள்ள வேண்டும்' என கர்நாடக மாம்பழ மேம்பாட்டு வாரியத்தை வலியுறுத்தினர்.
இது குறித்து, மாநில விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கர்நாடக மாம்பழ விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்கள், மாம்பழ விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து செலுவராயசாமி விளக்கினார்.
விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகையை செலுத்தும் திட்டத்தின் வாயிலாக, மாம்பழங்களை வாங்கி கொள்ளும்படி, செலுவராயசாமி கேட்டுக் கொண்டார்.
இதை கேட்ட சிவராஜ் சிங் சவுகான், 2.50 லட்சம் டன் மாம்பழங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாகக் கூறினார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.