உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு?
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு?
ADDED : ஏப் 14, 2025 04:06 AM

புதுடில்லி : கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் ரவி காலம் தாழ்த்துவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 8ல் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், கவர்னர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததோடு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது முடிவெடுக்க காலக்கெடு விதித்தது.
மேலும், மசோதாவை கவர்னர்கள் அனுப்பி வைத்தால், அதன் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது. மசோதா விஷயத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது, வரலாற்றில் இதுவே முதல் முறை.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணையின் போது, போதுமான வாதங்களை முன்வைக்க முடியாததாலும், சில குறைபாடுகள் இருப்பதாலும் இந்த சீராய்வு மனு அவசியம் என, மத்திய அரசு கருதுவதாகக் கூறப்படுகிறது.