மத்திய தொழில் பாதுகாப்பு படை 120 வீரர்கள் கோலாரில் முகாம்
மத்திய தொழில் பாதுகாப்பு படை 120 வீரர்கள் கோலாரில் முகாம்
ADDED : மார் 15, 2024 06:59 AM
கோலார்: லோக்சபா தேர்தல் பாதுகாப்புக்காக, கோலார் மாவட்டத்துக்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின், 120 வீரர்கள் வந்துள்ளனர்.
இரண்டு மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள கோலார் மாவட்டம், பதற்றமான மாவட்டமாகும். லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தும். தொண்டர்களுக்கு இடையே, மோதல், அடிதடி ஏற்படக்கூடும். வன்முறைகள், கலவரங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.
முன்னெச்சரிக்கையாக, மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர், கோலார் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். மூன்று நாட்களாக அணி வகுப்பு நடத்தினர். பங்கார்பேட் சதுக்கம், டூம்லைட் சதுக்கம், டேக்கல் சதுக்கம், கிளாக் டவர், கோலார் - பெங்களூரு சாலை, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம், எம்.பி., சாலை உட்பட, பல்வேறு இடங்களில் அணி வகுப்பு நடத்தினர்.
சீருடை அணிந்த ராணுவத்தினர், கையில் துப்பாக்கி பிடித்து அணிவகுப்பில் சென்றனர். இவர்களுடன் போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகளும் சென்றனர். போலீஸ் வாகனங்கள் சைரன் முழங்கியபடி சென்றன.
கோலார் எஸ்.பி., நாராயணா கூறியதாவது:
லோக்சபா தேர்தலை வெற்றிகரமாக நடத்தும் நோக்கில், மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர், கோலாருக்கு வந்துள்ளனர். தேர்தல் முடியும் வரை, இவர்கள் இங்கிருப்பர்.
ராணுவத்தினரும், போலீசாரும் தேர்தல் பணிகளை கண்காணிப்பர். விதிமீறல்களில் ஈடுபடுவோரை எச்சரிப்பர். விதிமீறலை தடுப்பது, எங்களின் நோக்கமாகும்.
மிகவும் பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று, ஆய்வு செய்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்தோம். மாவட்ட தேர்தல் அதிகாரியான, மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கு தயாராகிறோம்.
தேர்தல் என்பதால் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரசாரம், பொதுக் கூட்டம், ஊர்வலங்களில் பங்கேற்க வருவர்.
முக்கியஸ்தர்கள் வரும் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க, ஹெலிபேட்கள் தயார் செய்துள்ளோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கும், பாதுகாப்பு அறைகள் ஆய்வு செய்யப்படுகிறது.
நகரின் பல இடங்களில், பேனர், பிளக்ஸ்களை அகற்ற, குழு அமைத்துள்ளோம். அமைதியான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
அனைத்து சோதனைச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் நடப்பவற்றை, போலீஸ் மத்திய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க வசதி செய்யப்படும்.
பாதுகாப்பு ஊழியர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுவர். தேர்தல் பணிகள் தொடர்பாக, போலீசாருக்கு நான்கு முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

