ரொம்ப லேட் பண்றீங்க: மம்தா மீது மத்திய அமைச்சர் காட்டம்
ரொம்ப லேட் பண்றீங்க: மம்தா மீது மத்திய அமைச்சர் காட்டம்
ADDED : ஆக 13, 2024 07:55 AM

கோல்கட்டா; மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு வழக்கை ஒப்படைப்பதில் முதல்வர் மம்தா பானர்ஜி தாமதம் செய்வதாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் குற்றம்சாட்டி உள்ளார்.
படுகொலை
கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கு வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, உரிய விசாரணை நடக்கவில்லை என்றால் சி.பி.ஐ., விசாரணை கோரப்படும் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சி.பி.ஐ., விசாரணை
படுகொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு சக பயிற்சி மருத்துவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மத்திய அரசுடன் நடைபெற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில், பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தில் சி.பி.ஐ.,விசாரணையை முதல்வர் மம்தா பானர்ஜி தாமதப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் குற்றம்சாட்டி உள்ளார்.ஆவணங்களை ஒப்படையுங்கள்
இது குறித்து அவர் கூறியதாவது: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று கேட்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, அதை தாமதப்படுத்துகிறார். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., அவசியம் என்று அவர் விரும்பும் பட்சத்தில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறி உள்ளார்.

