இமயமலையில் உருகி வழியும் 432 பனிப்பாறை ஏரிகள்; மத்திய நீர் கமிஷன் எச்சரிக்கை
இமயமலையில் உருகி வழியும் 432 பனிப்பாறை ஏரிகள்; மத்திய நீர் கமிஷன் எச்சரிக்கை
ADDED : செப் 04, 2025 03:15 AM

புதுடில்லி: இமயமலையில் உள்ள 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் கவலையளிக்கும் வகையில் உருகி விரிவடைந்து வருவதால், நம் நாட்டிற்கு பேரிடர் அபாயம் நெருங்கி இருப்பதாக மத்திய நீர் கமிஷன் எச்சரித்துள்ளது.
நம் நாட்டில் உள்ள பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் குறித்த மாதாந்திர கண்காணிப்பு அறிக்கையை மத்திய நீர் கமிஷன் சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், லடாக், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலில் உள்ள 432 பனிப்பாறை ஏரிகள் கவலையளிக்கும் வகையில் உருகி விரிவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பனிப்பாறை ஏரிகள் வரைபடம் - 2023 அடிப்படையில், மொத்தம் உள்ள 681 பனிப்பாறை ஏரிகளில், இந்தியாவுக்குள் மட்டும் 432 பனிப்பாறை ஏரிகள் இருக்கின்றன.
சமீபத்திய கண்காணிப்பில் இந்த பனிப்பாறை ஏரிகள் வேகமாக உருகுவதால், நீர் பரவும் பகுதிகள் கடந்த ஜூன் மாதத்தில் வெகுவாக விரிவடைந்திருக்கிறது. எனவே, பேரிடர் நோக்கங்களுக்காக பனிப்பாறை ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை பருவநிலை மாறுபாடு காரணமாக இமயமலை பிராந்தியம் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. கண்ணுக்கு தெரியும் அளவுக்கு மலைகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன.
பனிப்பாறை ஏரிகளும் உருகி வழிந்தோடுகின்றன. இவையெல்லாம் பருவநிலை மாறுபாடு காரணமாக ஏற்பட்டிருக்கும் மோசமான விளைவுகள் என இயற்கை நம்மை எச்சரிக்கிறது. எனவே, பேரிடர்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய நீர் கமிஷனின் அறிக்கையின்படி நாட்டின் மொத்த பனிப்பாறை ஏரியின் இடப்பகுதி 30 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த 2011ல் 1,917 ஹெக்டேராக இருந்த பனிப்பாறை ஏரிகளின் இடப்பகுதி, தற்போது 2,508 ஹெக்டேராக விரிவடைந்திருக்கிறது. இது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதிகபட்சமாக அருணாச்சலில் தான் 197 பனிப்பாறை ஏரிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உருகி, தற்போது விரிவடைந்து வருகின்றன.
அவசியம் அதே போல் லடாக்கில் 120 பனிப்பாறை ஏரிகளும், ஜம்மு - காஷ்மீரில் 57 பனிப்பாறை ஏரிகளும், சிக்கிமில் 47 பனிப்பாறை ஏரிகளும், ஹிமாச்சலில் 6 பனிப்பாறை ஏரிகளும், உத்தராகண்டில் 5 பனிப்பாறை ஏரிகளும் உருகி விரிவடைந்து வருகின்றன.
கடந்த ஜூன் மாத கணக்கின்படி ஒட்டுமொத்த இமயமலைப் பகுதிகளிலும் 1,435 பனிப்பாறை ஏரிகள் உருகி விரிவடைந்துள்ளன. இதனால், பனிப்பாறை ஏரிகளை கண்காணிக்க நிகழ் நேர கண்காணிப்பு தொழில்நுட்ப கருவிகளை நிறுவ வேண்டியது அவசியம் என மத்திய நீர் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
மலை அடிவாரங்களில் வசிக்கும் மக்களுக்கு முன் கூட்டியே பேரிடர் தொடர்பான தகவல்களை வழங்க செயற்கைக்கோள் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை தொழில்நுட்பங்களையும் அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
உருகி வரும் பல ஏரிகள் இந்திய எல்லைகளுக்கு அப்பால் அமைந்திருந்தாலும், அவை நம் நாட்டின் வழியாகவே பாய்ந்து செல்வதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் படை, மத்திய ஜல்சக்தி துறையை ஒருங்கிணைத்து, உஷார் நடவடிக்கைகளை எடுக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.