அரசியலமைப்பு 240வது பிரிவின் கீழ் சண்டிகர் வருகிறதா; மத்திய அரசு விளக்கம்
அரசியலமைப்பு 240வது பிரிவின் கீழ் சண்டிகர் வருகிறதா; மத்திய அரசு விளக்கம்
ADDED : நவ 23, 2025 04:09 PM

புதுடில்லி: சண்டிகர் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் 240வது பிரிவின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வில்லை, பார்லி.யில் அது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட போவதில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 240வது பிரிவு என்பது, ஜனாதிபதியின் அதிகாரத்தை குறிப்பதாகும். அதாவது, சில யூனியன் பிரதேசங்களில் அமைதி, முன்னேற்றம் மற்றும் நல்ல நிர்வாகத்தை அளிப்பதற்காக ஜனாதிபதியால் விதிகள் உருவாக்க அனுமதிக்கும் ஒரு பிரிவாகும். இந்த பிரிவானது, குறிப்பாக சட்டசபைகள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தும்.
சட்டசபை அதிகாரம் இல்லாத பிரதேசங்கள் என்றால் ஜனாதிபதி விதிமுறைகளை உருவாக்கும் போது, பார்லி.யில் சட்டங்களை இயற்றலாம்.
இந் நிலையில் பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகரான சண்டிகரை அரசியலமைப்பின் 240வது பிரிவின் கீழ் மத்திய அரசு கொண்டு வர பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டது. அதற்கான மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.
தற்போது அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு விளக்கத்தையும் எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டு உள்ளது.
அதில் கூறி உள்ளதாவது;
சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கு என மத்திய அரசின் சட்டமியற்றும் செயல்முறையை எளிமைப்படுத்தும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில்தான் உள்ளது. இத்திட்டம் பற்றி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
எந்த வகையிலும் சண்டிகரின் ஆட்சி, அதன் நிர்வாக அமைப்பை மாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. சண்டிகரின் நலன்களை கருத்தில் கொண்டு, போதிய ஆலோசனைகளுக்கு பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். கவலைப்பட தேவையில்லை. வரவுள்ள பார்லி. குளிர்கால கூட்டத்தொடரில் இதுபோன்ற எந்த ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தும் எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை.
இவ்வாறு அந்த பதிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

