அரசு அலுவலக கழிவுப்பொருட்கள் விற்பனை; ஒரே மாதத்தில் ரூ.800 கோடி மத்திய அரசுக்கு வருவாய்
அரசு அலுவலக கழிவுப்பொருட்கள் விற்பனை; ஒரே மாதத்தில் ரூ.800 கோடி மத்திய அரசுக்கு வருவாய்
ADDED : நவ 09, 2025 12:03 PM

புதுடில்லி: அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத கழிவுப்பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது சந்திரயான்-3 திட்டத்தின் செலவை விட அதிகம் ஆகும்.
அரசு அலுவலகங்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்கள், பழுதான வாகனங்கள் மற்றும் கழிவுகளை ஏலம் விடப்பட்டு விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. பயனில்லாத பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இடப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல், 'துாய்மை மிஷன் 2.0' போன்ற திட்டத்தில், மத்திய அரசு அலுவலக கழிவுகளை சேகரித்து அகற்றவும், மறுசுழற்சி செய்யவும், விற்பனை செய்யவும் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, ரூ.615 கோடி மதிப்பிலான, சந்திரயான்-3 திட்டத்தின் செலவை விட அதிகம் ஆகும். 2021ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை ரூ.4100 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் செயல்பாட்டினை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ராம் மோகன் நாயுடு, ஜிதேந்திர சிங் ஆகியோர் பார்வையிட்டனர். 'துாய்மை மிஷன் 2.0' திட்டத்தின் கீழ் அரசு அலுவலங்களில் 928.84 லட்சம் சதுர அடி இடத்தில் இருந்த தேவையில்லாத கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு இருக்கிறது.
அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தேவையற்ற பொருட்களாக மாறிய பேப்பர் உள்ளிட்ட கழிவுகளை விற்பனை செய்து தூய்மையாக மாற்றுவதே இந்த பிரசாரத்தின் நோக்கம் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

