ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் : தொழில்துறையினர், வர்த்தகத் துறையினருக்கு ஜாக்பாட்
ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் : தொழில்துறையினர், வர்த்தகத் துறையினருக்கு ஜாக்பாட்
UPDATED : ஆக 15, 2025 09:48 PM
ADDED : ஆக 15, 2025 08:09 PM

புதுடில்லி: ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், 4 அடுக்குகளாக இருக்கும் அந்த வரியை 2 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஜிஎஸ்டியில் 5 % ,12%, 18 %, 28% என அடுக்குகள் உள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் இந்த 4 அடுக்குகள் இருந்து வருகின்றன. மத்திய நிதியமைச்சர் தலைமையில், மாநில அமைச்சர்கள் கொண்ட குழுவினர் கூடி ஆலோசனை செய்து வரி விகிதம் குறித்து முடிவு செய்து வந்தனர்.
இதனிடையே, சுதந்திர நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். அதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது.ஜிஎஸ்டி குறைப்பால் ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் நிதி நிலைமை மேம்படும் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரும் மாற்றங்கள் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்படி,
* இனிமேல் 12, 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளன.
* 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும்
* அதேபோல் 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும்.
* ஆடம்பர பொருட்கள், புகையிலை, குட்கா மற்றும் சிகரெட் ஆகியவற்றுக்கு 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்படும். இதில் 5- 7 பொருட்கள் இடம்பெறும்.
* அதேநேரத்தில் பிரிட்ஜ், ஏசி மற்றும் வாஷிங்மெஷின் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது.
* ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் நுகர்வுக்கு பெரிய ஊக்கம் அளிக்கும். மேலும் வரி விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்களினால், இழப்பு ஈடு செய்யப்படும்.
* உணவுப்பொருட்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் 5 சதவீத அடுக்கில் இருக்கும்.
* பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து ஜிஎஸ்டி வரம்புக்குள் வெளியே வைத்து இருக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

