விமான சேவை பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல; மத்திய அரசு விளக்கம்
விமான சேவை பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல; மத்திய அரசு விளக்கம்
ADDED : நவ 07, 2025 10:28 PM

புதுடில்லி: வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விமான சேவைகள் பாதிக்க காரணம், சைபர் தாக்குதல்கள் அல்ல என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
தலைநகர் டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடியது. இங்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 1500க்கும் அதிகமான விமானங்கள் வந்தும், இங்கிருந்து மற்ற நாடுகள் மற்றும் நகரங்களுக்கு சென்றும் வருகின்றன.
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக விமான சேவையில் பெரும் பாதிப்பு நிலவியது.
விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய தகவல்தொடர்பு வலை அமைப்பான AMSSல் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த பாதிப்பு இன்றும் நீடித்தது.
இதனால், டில்லியில் 800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சைபர் தாக்குதல் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில், தொழில்நுட்ப கோளாறு தான் அனைத்து விமான சேவைகள் பாதிப்புக்கு காரணம் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதல் இல்லை என்றும் அமைச்சகம் கூறி உள்ளது.
மேலும், டில்லி விமான நிலையமும் எக்ஸ் வலை தள பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் புறப்படும் முன் விமானங்களின் பயண அட்டவணையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பயணிகளை கேட்டுக் கொண்டு உள்ளது.
இதுகுறித்த அறிக்கை விவரம் வருமாறு;
விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய தகவல்தொடர்பு வலை அமைப்பில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
இந் நிலையில், விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய தகவல் தொடர்பு வலை அமைப்பான AMSSல் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர் செய்யப்பட்டு விட்டதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் விமான போக்குவரத்து சீரடையும் என்றும் கூறி உள்ளது.

