ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: விரைவில் வாங்க இந்தியா திட்டம்
ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: விரைவில் வாங்க இந்தியா திட்டம்
ADDED : நவ 28, 2025 09:30 AM

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தமாகும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கி.மீ., தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளையும் கண்காணிக்கும். அதேபோல் 400 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் முடியும்.
உலக நாடுகள் வைத்துள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளில் மிகவும் துல்லியமாக செயல்படக்கூடியது இந்த எஸ் 400 அமைப்பு. இதன் செயல்பாடுகளை ஆராய்ந்த இந்திய ராணுவம் 2018ம் ஆண்டில், ஐந்து எண்ணிக்கையில் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன் மொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய். முழுத் தொகையையும் இந்தியா செலுத்தி விட்டது. ஆனால் இதுவரை ரஷ்யா 3 எண்ணிக்கையில் மட்டுமே எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. மீதமுள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பு இன்னும் 12 மாதங்களுக்குள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என ரஷ்யா உறுதி அளித்துள்ளது.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இதன் மதிப்பு உலகளவில் உயர்ந்துவிட்டது. இந்நிலையில், 10,000 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது 120 கிமீ, 200 கிமீ, 250 கிமீ மற்றும் 380 கிமீ தொலைவில் வானில் எதிரி ட்ரோன்களை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளை இந்தியா வாங்க உள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை ஆப்பரேஷன் சிந்தூரின் போது தீர்ந்துபோன ஏவுகணை இருப்புக்களை நிரப்புவதையும், இந்தியாவின் ஒட்டுமொத்த வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் S-400க்கான பராமரிப்பு, பழுது மற்றும் பழுதுபார்ப்பு ஆகிய வசதிகளை அமைத்துக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. தேசப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், முப்படைகளை நவீனமயமாக்கும் வகையில் வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

