லடாக்கில் 5 மாவட்டங்கள் புதிதாக மலர்ந்தது; பெயர்கள் என்ன தெரியுமா?
லடாக்கில் 5 மாவட்டங்கள் புதிதாக மலர்ந்தது; பெயர்கள் என்ன தெரியுமா?
ADDED : ஆக 26, 2024 12:57 PM

லே: லடாக்கில் ஜன்ஸ்கார், திராஸ், ஷாம், நூப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. லடாக்கில், லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருந்தது. யூனியன் பிரதேசமாக இருப்பதால்,லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இனிமேல் 7 மாவட்டங்கள்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 26) லடாக்கில் ஜன்ஸ்கார், திராஸ், ஷாம், நூப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என சமூகவலைதளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார். இதனால் லடாக் இனிமேல் ஏழு மாவட்டங்கள் கொண்டதாகும். காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
வளமான லடாக்
இது குறித்து சமூகவலைதளத்தில் அமித்ஷா கூறியதாவது: புதிய மாவட்ட மக்களுக்கும் அரசால் வழங்கப்படும் சலுகைகள் வீட்டு வாசலுக்கு தேடி வரும். வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார். லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.