அரசியல் பயணத்தில் புதிய பாதை; அடித்துச் சொல்கிறார் சம்பாய் சோரன்
அரசியல் பயணத்தில் புதிய பாதை; அடித்துச் சொல்கிறார் சம்பாய் சோரன்
ADDED : ஆக 21, 2024 07:02 AM

ராஞ்சி: டில்லியில் தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 6 பேருடன் முகாமிட்டுருந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான செராய்கேலா கர்சவான் திரும்பினார்.
ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டார். அப்போது, அந்த கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கட்சியையும், ஆட்சியையும் சம்பாய் வழிநடத்தினார். பார்லிமென்ட் தேர்தல் பிரசாரமும் ஜார்க்கண்டில் அவர் தலைமையில் தான் நடந்தது. மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசார கூட்டங்களில் சம்பாய் பேசினார்.
அதிருப்தி
ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன், தான் மீண்டும் முதல்வர் ஆவதற்காக சம்பாய் சோரனை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டார். இது தொடர்பான கட்சி கூட்டங்களில் சம்பாய் அவமதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஹேமந்த் சோரன் மீது சம்பாய் கடும் அதிருப்தியில் இருப்பதாக, சில வாரங்களாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் டில்லியில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முகாமிட்டார். பா.ஜ.,வில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைகிறார் என தகவல்கள் பரவியது.
சொந்த ஊர் திரும்பினார்!
அதை உறுதி செய்யும் வகையில் சம்பாய் அறிக்கை வெளியிட்டார்.தான் அவமதிக்கப்பட்டதாகவும், தன் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாகவும், வேறு கட்சியில் இணைவது, புதுக்கட்சி தொடங்குவது, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என மூன்று சாய்ஸ் தனக்கு இருப்பதாக கூறி சம்பாய் சோரனும் அதிரடி கிளப்பியிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான செராய்கேலா கர்சவான் திரும்பினார். அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
புதிய அத்தியாயம்
அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தனிப்பட்ட காரணங்களுக்கு டில்லி சென்றேன். சமீபத்தில் சமூகவலைதளத்தில் என் கருத்தை பதிவிட்டேன். எனது விருப்பங்களை முழு நாடு பார்த்தது. நான் நாட்டு மக்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். நான் மூன்று முடிவுகளை எடுத்துள்ளேன். ஒன்று ஓய்வு பெறுவது, இரண்டாவது ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.
மூன்றாவது நான் எனது முடிவில் உறுதியாக இருந்தால், இன்னொரு கட்சியில் இணைந்து பணியாற்றுவேன். எனது புதிய அத்தியாயம் துவங்க உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையில் இருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர்களுடன் நான் தொடர்பிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

