ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணம்: தடுத்தது ஐசிசி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணம்: தடுத்தது ஐசிசி
UPDATED : நவ 15, 2024 10:24 PM
ADDED : நவ 15, 2024 10:01 PM

புதுடில்லி: பி.சி.சி.ஐ., எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சுற்று பயணத்தை ஐ.சி.சி., நிறுத்தி வைத்துள்ளது.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்., மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(பி.சி.பி.,) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ஐ.சி.சி., தொடர்களின் போது போட்டியை பலப்படுத்தும் வகையில் தொடரை நடத்தும் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு 'டிராபி டூர்' செல்வது வழக்கம்.இதனடிப்படையில் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பை சுற்றுப்பயணம் நவ., 16ம் தேதி இஸ்லாமாபாத்தில் துவங்கி, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முர்ரி, ஹன்சா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்ல பி.சி.பி.,திட்டமிட்டது.
இதற்கு பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்தது. ஐ.சி.சி.,யிலும் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி உடன் 'டிராபி டூர்' திட்டத்தை ரத்து செய்ய ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது.