ADDED : பிப் 19, 2024 06:41 AM
சண்டிகர் : பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரம் சண்டிகர். இதன் மாநகராட்சிக்கு கடந்த ஜன., 30ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 36 உறுப்பினர்கள் உடைய மாநகராட்சி மன்றத்தில், பா.ஜ.,வுக்கு 15, ஆம் ஆத்மி 13, காங்கிரஸ் 7, அகாலி தளத்துக்கு 1 என உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆம் ஆத்மி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தது. ஆனால் தேர்தல் முடிவில் பா.ஜ., மேயர் வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றார். அவருக்கு 16 ஓட்டுகள் கிடைத்தன, ஆம் ஆத்மிக்கு 12 ஓட்டுகள் கிடைத்தன, எட்டு ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
தேர்தல் அதிகாரியே ஓட்டுச்சீட்டுகளில் பேனாவால் கிறுக்கிவிட்டு, அவற்றை செல்லாது என அறிவித்ததாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் அதிகாரியை இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் நேற்றிரவு ராஜினாமா செய்தார். மேலும் மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.

