ADDED : ஜன 31, 2025 12:30 AM

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.,வின் ஹர்ப்ரீத் கவுர் பப்லா இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகர் சண்டிகர். அதன் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ்-, ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜ., தனித்து போட்டியிட்டது. சண்டிகர் மாநகராட்சிக்கு மொத்தம் 35 கவுன்சிலர்கள் உள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில், ஆம் ஆத்மி - 13, காங்கிரஸ் - 6, பா.ஜ., - 16 இடங்களில் வென்றன.
சண்டிகர் காங்., - எம்.பி.,க்கு மேயர் தேர்தலில் ஓட்டுரிமை உள்ளது.
இந்நிலையில், மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ தாக்கூர் கண்காணிப்பின் கீழ் ரகசிய ஓட்டெடுப்பு முறையில் தேர்தல் நடந்தது.
இதில், பா.ஜ., வேட்பாளர் ஹர்ப்ரீத் கவுர் பப்லா 19 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதா 17 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு ஆறு கவுன்சிலர்கள் இருந்தும், பா.ஜ., வெற்றி பெற்றது அவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆம் ஆத்மி, காங்., கவுன்சிலர்கள் சிலர் கட்சி மாறி ஓட்டளித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

