அடங்காமல் 'அட்ராசிட்டி' செய்யும் எம்.எல்.ஏ.,க்கள்: ஆட்சியை காப்பாற்ற போராடும் சந்திரபாபு நாயுடு
அடங்காமல் 'அட்ராசிட்டி' செய்யும் எம்.எல்.ஏ.,க்கள்: ஆட்சியை காப்பாற்ற போராடும் சந்திரபாபு நாயுடு
UPDATED : ஆக 29, 2025 06:25 AM
ADDED : ஆக 29, 2025 12:35 AM

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து கடந்தாண்டு ஆட்சியை பறித்து, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்களின் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர் தலைவலியாக உள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, மணல் கடத்தல், சட்டவிரோத மதுபான கடைகள், ரியல் எஸ்டேட் மோசடிகள் என, தெலுங்கு தேச எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்கள், சந்திரபாபு நாயுடுவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிஉள்ளது.
தலைவலி ஆட்சி அமைந்த ஓராண்டில் மட்டும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது ஆறு புகார்கள் பதிவாகியுள்ளன. ஸ்ரீசைலம் தொகுதி எம்.எல்.ஏ., வெங்கல் ரெட்டி, தன் வாகனத்தை சோதனை செய்த வனத்துறை அதிகாரிகளை தாக்கினார். இது ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
ஸ்ரீகாகுளம் எம்.எல்.ஏ., ரவி மீது, கல்லுாரி முதல்வர் பாலியல் புகார் அளித்தார். குண்டூர் மாவட்ட எம்.எல்.ஏ., ஒருவரும் இதே குற்றச்சாட்டை எதிர்கொண்டுஉள்ளார்.
கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சீனிவாஸ், ரியல் எஸ்டேட் தகராறில் அரசு கட்டடம் ஒன்றை இடிக்கச் சொன்னது, ஆளும் தெலுங்கு தேச கூட்டணிக்கு தலைவலியாக மாறியது.
இதெல்லாம் ஒருபுறம் என்றாலும், முதல்வர் குடும்பத்துக்கு உள்ளேயே குழப்பத்தை விளைவிக்கும் வகையில், சில சம்பவங்கள் அரங்கேறிஉள்ளன.
சந்திரபாபு நாயுடுவின் உறவினரும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு எதிராக அனந்தபூர் மாவட்ட எம்.எல்.ஏ., டகுபதி பிரசாத் கிளம்பியுள்ளது, சந்திரபாபுவை உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு தள்ளிஉள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர்-., குறித்து வாய்க்கு வந்தபடி அவர் பேச, பதிலுக்கு டகுபதியின் உருவ பொம்மையை ரசிகர்கள் எரிக்க, அனந்தபூர் மட்டுமின்றி ஆந்திராவே பற்றி எரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு எதிராக டகுபதி கிளம்பியதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
துணை முதல்வராக உள்ள ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் கூட, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களால் மன நிம்மதியை இழந்துள்ளார்.
அவர் கட்சியில், மொத்தமுள்ள 21 எம்.எல்.ஏ.,க்களில், 17 பேர் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளனர்.
திணறல் உளவுத்துறை தகவலின்படி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களில் பெரும் பாலானோர் மதுபான மாபியாவாக உள்ளனர். ஆந்திராவில், 4,000 உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் உள்ளன.
ஆனால், 75,000 மதுபான கடைகள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. ஆனால், இவை அனைத்தும், பிரதான கடைகளுடன் இணைக்கப் பட்டுள்ளன.
அங்கு, நடப்பாண்டில் கலால் வரியில் இருந்து வரும் வருவாய் 24,000 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், அது, 40,000 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கும் என்ற அச்ச உணர்வு சந்திரபாபுவின் கைகளை கட்டிப்போட்டு உள்ளது.
மணல் கடத்தல், மரம் கடத்தல் என பல்வேறு புகார்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலர் மீது எழுந்ததும் அதிரடி முடிவை சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
'சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடுத்த முறை சீட் கிடையாது' என, பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்கள் குறைவதாக தெரியவில்லை.
கட்டுக்கடங்காமல், அரசு விதிகளை மீறி அட்ராசிட்டி செய்து வரும் எம்.எல்.ஏ.,க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் சந்திரபாபு திணறி வருகிறார்.
- நமது சிறப்பு நிருபர் -

