லட்டு விவகாரத்தில் நாயுடு செய்த பாவம்: பரிகாரம் செய்ய போகிறாராம் ஜெகன்
லட்டு விவகாரத்தில் நாயுடு செய்த பாவம்: பரிகாரம் செய்ய போகிறாராம் ஜெகன்
UPDATED : செப் 25, 2024 07:42 PM
ADDED : செப் 25, 2024 07:04 PM

அமராவதி: திருப்பதி லட்டு பிரசாத விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை துடைக்க அனைத்து கோயில்களிலும் வரும் 28-ம் தேதி நடைபெறும் பரிகார பூஜையில் ஆந்திர மக்கள் கலந்து கொள்ளுமாறு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கடந்த 18-ம தேதியன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் முதல்வர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‛ எக்ஸ்' வலைதளத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பதிவேற்றியுள்ளதாவது, அரசியல் உள்நோக்கத்துடன், என் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக பொய்யான தகவலை கூறியதன் மூலம் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை துடைக்க வேண்டும். அதற்காக மாநிலம் முழுதும் உள்ள கோயில்களில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள பூஜைகள் செய்து பரிகாரம் செய்ய வேண்டும். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் பதிவேற்றியுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி எழுதியுள்ள கடித விவரம், லட்டு பிரசாதம் தயாரிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் பின்பற்ற வரும் நடைமுறையில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. அரசியல் காரணத்திற்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகளை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார். இதன் மூலம் முதல்வருக்கு உள்ள அந்தஸ்தை மட்டுமல்ல, அதற்கும் கீழாக தரம் தாழ்ந்து போய்விட்டார். முதல்வரின் செயல் வெட்கக்கேடானது. இதில் உண்மையை தாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே வரும் 28-ம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்று ஜெகன் தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.