சந்திரசேகர ராவ் கட்சி எம்.பி., காங்கிரசுக்கு ஓட்டம்
சந்திரசேகர ராவ் கட்சி எம்.பி., காங்கிரசுக்கு ஓட்டம்
ADDED : மார் 17, 2024 11:45 PM

ஹைதராபாத்: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தெலுங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் எம்.பி., ரஞ்சித் ரெட்டி, அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவி, பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியை பறிகொடுத்தது.
இதையடுத்து, அக்கட்சியில் இருந்து பலர் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் லோக்சபா உறுப்பினரான ராமுலு, தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று அக்கட்சியைச் சேர்ந்த செவாலே லோக்சபா தொகுதி எம்.பி.,யான ரஞ்சித் ரெட்டி விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக, சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் அவர் தன் ராஜினாமா கடிதத்தையும் பதிவிட்டார்.
இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
என்னை லோக்சபா உறுப்பினராக தேர்வு செய்து, மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்த கட்சி தலைமைக்கு நன்றி.
தற்போது நம் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக, மாற்றுப் பாதையில் செல்லும் கடின முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கனத்த இதயத்துடன் பாரத் ராஷ்ட்ர சமிதியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களில் ரஞ்சித் ரெட்டி, காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானா முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான ரேவந்த் ரெட்டி உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக நேற்று இணைந்தார்.
பாரத் ராஷ்ட்ர சமிதியின் உறுப்பினர்கள் அடுத்தடுத்து விலகி வருவது, முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

