பா.ஜ.,வை மிரட்ட சந்திரசேகர ராவ் திட்டமிட்டது... அம்பலம்!
பா.ஜ.,வை மிரட்ட சந்திரசேகர ராவ் திட்டமிட்டது... அம்பலம்!
ADDED : மே 29, 2024 12:51 AM

ஹைதராபாத் : அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன் மகளை காப்பாற்றுவதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் மீது வழக்கு தொடர தெலுங்கானா முதல்வராக இருந்தபோது, பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முயன்றார் என, முன்னாள் போலீஸ் அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடந்தபோது, அரசியல் பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்ததது.
இது தொடர்பாக, ஹைதராபாத் முன்னாள் துணை போலீஸ் கமிஷனர் ராதாகிஷன் ராவ் கைது செய்யப்பட்டார். சந்திரசேகர ராவின் நம்பிக்கைக்கு உரியவராக இவர் இருந்து வந்தார்.
இந்நிலையில், டில்லி அரசின் மதுபான கொள்கை மோசடி தொடர்பாக, சந்திரசேகர ராவின் மகள் கவிதா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.
நெருக்கடி
கடந்த, 2020ல், பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த, நான்கு எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயன்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் ராமசந்திர பாரதி, நந்து குமார், சிம்மயாஜி சுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தன் மகள் மீது, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, இந்த எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில், பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்க சந்திரசேகர ராவ் முயன்றதாக, ராதாகிஷன் ராவ் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.
பா.ஜ.,வின் அமைப்புச் செயலரான பி.எல். சந்தோஷை இந்த வழக்கில் சேர்த்து, அவரை கைது செய்யும்படி, 'பெத்தண்ணா' எனப்படும் பெரிய அண்ணனான சந்திரசேகர ராவ் தனக்கு உத்தரவிட்டதாக ராதாகிஷன் ராவ், வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கை, மாநில போலீசிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்ததுடன், கைது செய்த மூவரையும் ஜாமினில் விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரம்
பி.எல்.சந்தோஷை கைது செய்து, அவரை விடுவிக்க வேண்டுமானால், மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில் தன் மகள் கவிதாவை விடுவிக்கும்படி, பா.ஜ.,வுடன் பேரம் பேச சந்திரசேகர ராவ் திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.
இது தெலுங்கானா அரசியலில் புதிய புயலை ஏற்படுத்திஉள்ளது.