நிலவுக்கு சென்று திரும்பும் சந்திரயான் - 4 அமைச்சரவை பச்சைக்கொடி
நிலவுக்கு சென்று திரும்பும் சந்திரயான் - 4 அமைச்சரவை பச்சைக்கொடி
ADDED : செப் 19, 2024 02:19 AM

புதுடில்லி,வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட, 'சந்திரயான் - 3' திட்டத்தை தொடர்ந்து, நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர, 'சந்திரயான்- - 4' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், 2023 ஜூலை 14ல், சந்திரயான் - 3 விண்கலத்தை ஏவியது. இது வெற்றிகரமாக, ஆக., 23ல் தரையிறங்கி சாதனை படைத்தது.
நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு மற்றும் தென்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை நம் நாடு பெற்றது. விண்வெளித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சந்திரயான் - 4, ககன்யான், இந்திய விண்வெளி நிலையம், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டம் உள்ளிட்ட முக்கிய விண்வெளி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.