உறைவிட பள்ளிகளில் குவெம்பு வரிகள் மாற்றம் சட்டசபை, மேலவையில் கடும் வாக்குவாதம்
உறைவிட பள்ளிகளில் குவெம்பு வரிகள் மாற்றம் சட்டசபை, மேலவையில் கடும் வாக்குவாதம்
ADDED : பிப் 20, 2024 07:07 AM

பெங்களூரு: மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளிகளின் நுழைவு பகுதியில் இருந்த 'அறிவு கோவில் இது, கை கூப்பி உள்ளே வா' என்ற வாசகத்தை, 'அறிவு கோவில் இது, தைரியத்துடன் கேள்வி கேள்' என்று மாற்றி எழுதியது தொடர்பாக, சட்டசபை, மேலவையில் நேற்று கடும் வாக்குவாதம் நடந்தது.
கர்நாடக சமூக நலத்துறை சார்பில், மொரார்ஜி தேசாய் பெயரில், மாநிலத்தில் 200 உறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளின் நுழைவு பகுதியில், 'அறிவு கோவில் இது, கை கூப்பி உள்ளே வா' என்ற வாசகம் இவ்வளவு நாட்களாக எழுதப்பட்டிருந்தது.
இது, கன்னடத்தின் புகழ்பெற்ற கவிஞர் குவெம்பு எழுதிய கவிதையில் வரும் வாசகம் ஆகும். ஆனால், இரண்டு நாட்களாக 'அறிவு கோவில் இது, தைரியத்துடன் கேள்வி கேள்' என்று மாற்றி எழுதப்பட்டது.
இது குறித்து, 'பூஜ்ய' வேளையில் சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - விஜயேந்திரா: மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளிகளின் நுழைவு பகுதியில் இருந்த, 'அறிவு கோவில் இது, கை கூப்பி உள்ளே வா' என்ற வாசகத்தை, 'அறிவு கோவில் இது, தைரியத்துடன் கேள்வி கேள்' என்று மாற்றி எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த அரசில் என்ன நடக்கிறது.
இது தொடர்பாக சமூக நலத்துறை முதன்மை செயலரின் உத்தரவு, வாட்ஸாப் வலை தளங்களில் பரவுகிறது. வாசகத்தை மாற்றியதன் மூலம், குவெம்புக்கு அவமானம் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., - அஸ்வத் நாராயணா: வாசகத்தை மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன. இதற்கு முன், சமூக நலத்துறை உறைவிட பள்ளிகளில், வழிபாட்டு நிகழ்ச்சிகள் கொண்டாட கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. பின்னர், திரும்ப பெறப்பட்டது.
அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா: இந்த விஷயத்தை பா.ஜ., உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். உண்மை நிலவரம் குறித்து அரசு பதில் கொடுக்கும். எனவே கூடுதலாக பேச வேண்டாம். வாய்ப்பு இருந்தால், நாங்களும் பேசுவோம்.
அஸ்வத் நாராயணா: வாசகத்தை மாற்றியது ஏன் என்று நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். அமைச்சரோ, நாங்கள் கூடுதலாக பேசுவதாக சொல்கிறார். இதுபோன்று பதில் அளிப்பது சரியில்லை.
கிருஷ்ணபைரே கவுடா: குவெம்புக்கு அவமானம் செய்துள்ளதாக கூறுகின்றீர். அதே குவெம்புவின் பாடத்தையே, பள்ளி பாட புத்தகத்தில் இருந்து நீங்கள் நீக்கினீர்கள். எங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறீர்களா.
அமைச்சர் பிரியங்க் கார்கே: அனைத்திலும் அரசியல் செய்கிறீர்கள். சமமான சமூகத்தை அமைப்பது உங்களுக்கு தேவையில்லை.
(அப்போது, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறி, மாறி குற்றஞ்சாட்டி கொண்டனர். இரு தரப்பினரும் கடுமையா வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்)
சபாநாயகர் காதர்: நீங்கள் குறிப்பிட்ட விஷயத்துக்கு, அரசு பதில் அளிக்கும். இப்போதே வாதம், விவாதம் வேண்டாம்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: அரசு பதில் அளிப்பதை, நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. சமூக நலத்துறை முதன்மை செயலர், வாசகத்தை மாற்றியது சரியில்லை. அவருக்கு அதிகாரம் அளித்தது யார். யாரை கேட்டு மாற்றினார். அரசின் செயல்பாடு சரியில்லை.
சபாநாயகர்: இது தொடர்பாக, அரசு நாளை பதில் அளிக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதுபோன்று, சட்ட மேலவையிலும், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அனைவரும் சமம் என்ற, குவெம்புவின் கொள்கைகளை அரசு பின்பற்றி வருகிறது. பா.ஜ.,வினருக்கு செய்வதற்கு வேறு வேலையின்றி, அனைத்து விஷயத்திலும் தவறை கண்டு பிடிக்கின்றனர். சமூகத்தில் பிரச்னை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
- சிவகுமார், துணை முதல்வர்
வாசகத்தை யார் மாற்றியது, நான் மாற்றும்படி கூறவில்லை. நாங்கள் ஏன் மாற்ற வேண்டும். குவெம்புவின் இலக்கியத்தை மாற்றுவதற்கு நாங்கள் என்ன இலக்கியவாதிகளா.
- மஹாதேவப்பா, அமைச்சர், சமூக நலத்துறை
குவெம்புவின் வாசகத்தை மாற்றியதற்கு காரணம் தெரியவில்லை. எந்த அடிப்படையில் மாற்றினர் என்பது தெரியவில்லை. நாங்கள் அவரது கொள்கையை பின்பற்றி வருகின்றோம்.
- மது பங்காரப்பா,
அமைச்சர், ஆரம்ப கல்வி, எழுத்தறிவுத்துறை

