கட்சி பெயரை பழையபடி மாற்றுங்க! பி.ஆர்.எஸ்.,சில் வலுக்கும் கோரிக்கை
கட்சி பெயரை பழையபடி மாற்றுங்க! பி.ஆர்.எஸ்.,சில் வலுக்கும் கோரிக்கை
ADDED : ஜன 14, 2024 12:16 AM

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் பெயரை, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என மீண்டும் மாற்றும்படி, அக்கட்சி தலைமையிடம், மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார்.
ஆலோசனை
தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையில், தன் கட்சியின் பெயரை, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்பதில் இருந்து, பாரத் ராஷ்ட்ர சமிதி என, சில மாதங்களுக்கு முன் மாற்றினார்.
இந்த புதிய பெயருடன், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலை, பாரத் ராஷ்ட்ர சமிதி எதிர்கொண்டது. எனினும் மொத்தமுள்ள, 119 சட்டசபை தொகுதிகளில், வெறும், 39ல் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை காங்கிரசிடம் தாரைவார்த்தது.
தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே, வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்த சந்திரசேகர ராவின் இடுப்பு எலும்பு முறிந்தது. அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சந்திரசேகர ராவின் மகனும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் செயல் தலைவருமான கே.டி.ராமா ராவ், கடந்த சில நாட்களாக, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சியின் பெயரை மீண்டும் பழையபடி, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என மாற்றம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளனர்.
புத்துணர்ச்சி
இது குறித்து, கட்சி மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு, கட்சியின் பெயரை மாற்றியதும் ஒரு முக்கிய காரணம். கட்சியின் பெயரில் இருந்து, தெலுங்கானா என்ற வார்த்தையை நீக்கியது, மாநிலம் மற்றும் மக்களுடனான தொடர்பை துண்டித்து விட்டதாகத் தெரிகிறது.
எனவே, கட்சியின் பெயரை மீண்டும் பழையபடி, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என, மாற்ற வேண்டும். இது, எதிர் வரும் லோக்சபா தேர்தலில் கட்சிக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

