'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களுக்கான விதிகள் மாற்றம்!: போலி தள்ளுபடி விலை அறிவிப்புக்கு சிக்கல்
'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களுக்கான விதிகள் மாற்றம்!: போலி தள்ளுபடி விலை அறிவிப்புக்கு சிக்கல்
UPDATED : செப் 11, 2026 10:40 PM
ADDED : செப் 11, 2026 09:33 PM
புதுடில்லி: 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 1ல் அமலாக உள்ள இந்த விதிகள், போலியான தள்ளுபடி விலை அறிவிப்பு, குறிப்பிட்ட, 'பிராண்டு'களுக்கு சாதகமான தேடல் முடிவுகள், மறைமுக கூடுதல் கட்டணங்கள், நுகர்வோர் தரவு பயன்பாடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.
'இ--காமர்ஸ்' எனப்படும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக, தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு புகார்கள் குவிகின்றன. கடந்த 2025ம் ஆண்டு தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு வந்த 17.71 லட்சம் புகார்களில் 5.13 லட்சம் புகார்கள் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பானவை. இதையடுத்து, நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.
புதிய விதிகளின் கீழ், ஆன்லைன் தளங்களில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது, தற்போதைய விலையுடன், அதற்கு முந்தைய விலையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். அதற்கு முந்தைய விலை என்பது, கடந்த 30 நாட்களில் அந்த பொருள் விற்பனை செய்யப்பட்ட குறைந்தபட்ச விலையாக இருக்க வேண்டும். விற்பனைக்கு முன் விலையை உயர்த்திவிட்டு, பின் அதிக தள்ளுபடி வழங்குவது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு இதன் மூலம் முடிவு கட்டப்படும்.
மேலும், ஒரு பொருளுக்கு அறிவிக்கப்படும் தள்ளுபடி உண்மையில் எவ்வளவு என்பது குறித்து நுகர்வோர் தெளிவாக தெரிந்து கொள்ளவும் முடியும். எந்த பொருளை வாங்க வேண்டும் என்பது குறித்து நுகர்வோர் எடுக்கும் முடிவுகளை பாதிக்கும் வகையில், தேடல் முடிவுகளை செயற்கையாக மாற்றுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
'இ--காமர்ஸ்' தளத்தின் சொந்த தயாரிப்புகளையோ, குறிப்பிட்ட விற்பனையாளர்கள் அல்லது குறிப்பிட்ட பொருட்களுக்கு நியாயமற்ற முன்னுரிமையோ அளிக்கக் கூடாது. பணம் செலுத்தி முன்னிலைப்படுத்தப்படும் பொருட்கள் நுகர்வோருக்கு காட்டப்படும் போது விளம்பரம் என்பதை தெளிவாகவும் முக்கியமாகவும் குறிப்பிட வேண்டும்.
இதன் வாயிலாக, சாதாரண தேடல் முடிவில் இடம்பெறும் பொருட்களையும், பணம் செலுத்தி முன்னிலைப்படுத்தப்படும் பொருட்களையும் நுகர்வோர் எளிதில் வேறுபடுத்தி அறிய முடியும். 'இ - காமர்ஸ்' தளங்களில் பெரிதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, 'டார்க் பேட்டர்ன்' வடிவமைப்பு ஆகும்.
நுகர்வோர் விரும்பாத பொருட்கள் அல்லது சேவைகளை அவர்களின் வாங்கும் பட்டியலில் தானாக சேர்ப்பது, தேடிய ஒரு பொருளை உடனே வாங்க செய்ய குறைந்த இருப்பே உள்ளது என காட்டி அவசரமாக வாங்க வேண்டிய அழுத்தத்தை உருவாக்குவது போன்ற ஏமாற்றும் இணையதள வடிவமைப்புகள் 'டார்க் பேட்டர்ன்' எனப்படுகின்றன.
இந்தியாவில் ஏற்கனவே 2023ம் ஆண்டின், 'டார்க் பேட்டர்ன்' வழிகாட்டுதல்கள் மூலம் இதுபோன்ற சில நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய விதிகளின்படி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்களது தளங்களை சுய தணிக்கை செய்து, 'டார்க் பேட்டர்ன்' விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
தணிக்கை சான்றிதழை இணையதளம் அல்லது செயலியில் காட்சிப்படுத்த வேண்டும். ஆன்லைனில் பொருட்களை வாங்கும் முன், அதன் காலாவதி தேதி, 'ரிட்டர்ன்' மற்றும் 'ரீபண்ட்' விதிகள், உத்தரவாதம், டெலிவரி மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்களை தெளிவாக வழங்க புதிய விதி வகை செய்கிறது.
பொருளின் விலை மட்டுமின்றி, அந்த பொருளுக்கு நுகர்வோர் இறுதியாக செலுத்த வேண்டிய மொத்த தொகையும் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளனர். நுகர்வோர் தொடர்பான தரவுகளை பயன்படுத்துவதற்கு, அவர்களின் வெளிப்படையான மற்றும் உறுதியான ஒப்புதல் பெற வேண்டும்.
அடுத்ததாக ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி பொருட்களில், அது உற்பத்தி செய்யப்பட்ட நாடு மற்றும் இறக்குமதியாளர் குறித்த தகவல்கள் தெளிவாக வழங்கப்பட வேண்டும் என விதிகள் வகுத்துள்ளனர்.
புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது. அதற்கு முன் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது இணையதளம், செயலி, மென்பொருள், தேடல் வழிமுறைகள் மற்றும் விற்பனையாளர் தொடர்பான நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
