மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிடுவது மத உணர்வை புண்படுத்தாது: ஐகோர்ட்
மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிடுவது மத உணர்வை புண்படுத்தாது: ஐகோர்ட்
UPDATED : அக் 17, 2024 05:52 AM
ADDED : அக் 17, 2024 01:48 AM

பெங்களூரு: மசூதிக்குள், 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியதாக இருவர் மீது போலீசார் பதிவு செய்த கிரிமினல் வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள மசூதி ஒன்றில், 2023 செப்., 24, இரவு 10:50 மணிக்கு நுழைந்த இருவர், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் அந்த இளைஞர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யும்படி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவு:
இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழ்ந்து வருவதாக புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எல்லா செயல்களும் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்ய முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மனுதாரர்களுக்கு எதிரான மேல் நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயல். எனவே, மனுதாரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை ரத்து செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.