ADDED : பிப் 04, 2024 06:01 AM

சிக்கபல்லாப்பூர் : மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்தவர், போலீசில் சரண் அடைந்தார்.
சிக்கபல்லாப்பூர் சிந்தாமணி திப்பு படவானேயில் வசித்தவர் ஜாபிர் பாஷா என்ற நேபாள், 26. இவரது நண்பர் முக்தியார் பாஷா, 28. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து மனைவி, பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஜாபிருக்கும், முக்தியாரின் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, இருவரும் ஓட்டம் பிடித்தனர். நேற்று முன்தினம் மாலை முக்தியாரிடம் மொபைல் போனில் பேசிய ஜாபிர், “இனி உன் மனைவி உன்னுடன் சேர்ந்து வாழ வர மாட்டார். நான், அவரை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். நீ மறந்துவிடு,” என்று கூறி உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த முக்தியார், “உன்னுடன் பேச வேண்டும்,” என்று, ஜாபிரை அழைத்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், திப்பு படவானேயில் இருவரும் சந்தித்தனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜாபிரை, முக்தியார் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் சிந்தாமணி போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார்.