ADDED : ஜன 14, 2024 12:24 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாடகை வீட்டில் சந்தேகப்படும்படியாக வசித்த ஐந்து பேரை, கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து, ஏழு நாட்டு துப்பாக்கிகள், 45 துப்பாக்கி குண்டுகள், வாக்கி டாக்கிகள், 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், இவர்களுக்கு லஷ்கர் - இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிந்தது.
இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. பெங்களூரில் 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, கேரளாவின் நசீர், இவர்களுக்கு தலைவராக செயல்பட்டது தெரிய வந்தது.
தவிர வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஜுனைத் அகமது, சல்மான் கான் ஆகியோருக்கும் சதித்திட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவர்கள் எட்டு பேர் மீதும், பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிகையில் நசீர் கூறியதால், பெங்களூரில் பல இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஏழு பேரும் திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

