நடிகர் தர்ஷன் மீது இன்று குற்றப்பத்திரிகை? 4,500 முதல் 4,800 பக்கங்களில் தயாரித்துள்ள போலீசார்!
நடிகர் தர்ஷன் மீது இன்று குற்றப்பத்திரிகை? 4,500 முதல் 4,800 பக்கங்களில் தயாரித்துள்ள போலீசார்!
ADDED : செப் 04, 2024 06:23 AM

பெங்களூரு : ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது, இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு, 34, ஆபாச குறுந்தகவல் அனுப்பினார். இதனால் கடந்த ஜூன் 8ம் தேதி சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருக்கு காரில் கடத்தி வரப்பட்டார். ஆர்.ஆர்., நகர் பட்டணகெரே ஷெட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் காமாட்சிபாளையா பகுதியில் சாக்கடை கால்வாய் அருகே வீசப்பட்டது. இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் கிடைத்தது தெரிந்ததால், சமீபத்தில் தர்ஷன் உட்பட 10 பேர், வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
அறிக்கை
இந்த கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக, விஜயநகர் உதவி போலீஸ் கமிஷனர் சந்தன் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான போலீசார், ரேணுகாசாமி கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
வழக்கிற்கு தேவையான வலுவான ஆதாரங்களையும் திரட்டினர். சிறிய ஆதாரங்களை கூட விடவில்லை.
கைப்பற்றிய ஆதாரங்களை பெங்களூரு மற்றும் ஹைதராபாதில் உள்ள எப்.எஸ்.எல்.,க்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து அறிக்கைகளும் பெற்றனர்.
ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு, வரும் 8ம் தேதியுடன் மூன்று மாதங்கள் ஆக போகிறது.
வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால், அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் செய்து வந்தனர்.
இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டியில், ''ரேணுகாசாமி கொலை தொடர்பாக, எங்கள் விசாரணை முடிந்துவிட்டது.
குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியும் முடிந்து உள்ளது. இன்று அல்லது நாளை மறுநாள் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
மெசேஜ் உறுதி
குற்றப்பத்திரிகை 4,500 முதல் 4,800 பக்கங்கள் கொண்டதாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்கள், மெசேஜ் அனுப்பியதே, ரேணுகாசாமி கொலைக்கு காரணம் என்று, முதலில் இருந்தே சொல்லப்பட்டது.
இதை உறுதி செய்ய, ரேணுகாசாமி, பவித்ராவின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.,க்களை, இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு காமாட்சிபாளையா போலீசார் அனுப்பி இருந்தனர்.
ரேணுகாசாமி ஐ.டி.,யில் இருந்து ஆபாச புகைப்படங்கள், மெசேஜ் சென்றதா என்பது பற்றி, தகவல் அளிக்கும்படி கேட்டு இருந்தனர்.
தற்போது இதுதொடர்பான அறிக்கையை, இன்ஸ்டாகிராம் நிறுவனம், போலீசாருக்கு கொடுத்துள்ளது.
அந்த அறிக்கை மூலம் ரேணுகாசாமி, பவித்ராவுக்கு ஆபாச புகைப்படம், மெசேஜ் அனுப்பியது உறுதியாகி உள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நேரம் வந்து விட்டது. குற்றப்பத்திரிகையில் என்ன உள்ளது என்று, எனக்கு தெரியாது. குற்றப்பத்திரிகையில் தர்ஷனை முதல் குற்றவாளியாக சேர்ப்பது பற்றி, போலீசார் முடிவு செய்வர்.
பரமேஸ்வர்
உள்துறை அமைச்சர்