ஒரே குடும்பத்தில் 4 பேரை கொன்றவர் மீது குற்றப்பத்திரிகை
ஒரே குடும்பத்தில் 4 பேரை கொன்றவர் மீது குற்றப்பத்திரிகை
ADDED : பிப் 15, 2024 05:02 AM

உடுப்பி : ஒரே குடும்பத்தில் நான்கு பேரை கொன்றவர் மீது, நீதிமன்றத்தில் 2,202 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
உடுப்பி மல்பே திரிப்தி லே - அவுட்டில் வசித்தவர் ஹசினா, 47. இவரது மகள்கள் அய்னாஸ், 21, அப்னான், 23, மகன் அசீம், 14. கடந்த ஆண்டு நவம்பர் 12 ம் தேதி, இவர்கள் நான்கு பேரும் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
கொலை நடந்து இரண்டு நாட்கள் கழித்து, மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரவீன் அருண் சவுகாலே, 39 என்பவர் பெலகாவியில் வைத்து கைது செய்யப்பட்டார். அய்னாசும், பிரவீனும் விமான நிறுவனத்தில் வேலை செய்தனர். இருவரும் காதலித்தனர். ஆனால் பிரவீனிடம் இருந்து அய்னாஸ் பிரிந்ததால், அவரை கொன்றதும், தடுக்க வந்த குடும்பத்தினரை தீர்த்துக்கட்டியதும் தெரிந்தது.
தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக மல்பே போலீசார் 244 பேரின் சாட்சியங்கள், தடய அறிவியல் அறிக்கை உதவியுடன் 2,202 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்தனர். அந்த குற்றப்பத்திரிகையை நேற்று முன்தினம் உடுப்பி ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் கொலைக்கான காரணம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
பிரவீன் அருண் சவுகாலேவும், அய்னாசும் விமான நிறுவனத்தில் வேலை செய்ததால், இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்து உள்ளது. இவர்களின் நட்பை பிரவீன் மனைவி பிரியா, சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் பிரவீனிடம் இருந்து, அய்னாஸ் விலகி உள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அய்னாசின் காதலன், கத்தாரில் இருந்து திரும்பி வந்து உள்ளார். காதலனை திருமணம் செய்ய போவதாகவும், திருமண தேதி குறிக்கப்பட்டு விட்டது என்றும், பிரவீனிடம், அய்னாஸ் கூறி உள்ளார்.
ஆனால், அய்னாஸ் தன்னை விட்டு பிரிந்து செல்வதை, பிரவீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அய்னாசை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். பிரவீனும், அய்னாசும் பழகியது, அப்னானுக்கும் தெரியும் என்பதால், சகோதரிகளை தீர்த்துக்கட்ட நினைத்தார்.
பிரவீனுக்கு, அய்னாசின் வீடு தெரியாது. ஆனாலும் ஸ்னாப் சாட் செயலி மூலம் கண்டுபிடித்து உள்ளார். கடந்த நவம்பர் 12ம் தேதி, அய்னாஸ் வீட்டிற்குள் புகுந்து, முதலில் அவரை கொன்று உள்ளார். பின்னர் அப்னானை கொன்றுவிட்டு தப்ப முயன்று உள்ளார்.
அவரை ஹசினாவும், அசீமும் பிடிக்க முயன்றதால், அவர்களையும் தீர்த்துக்கட்டி உள்ளார். பிரவீனின் மனைவி பிரியாவும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் ரியா. கடந்த 2009ல் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் ரியா என்ற பெயரை பிரியா என்று மாற்றி உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள், குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

