ஏமாற்றுக்காரர்... பொய்யர்... திமிர் பிடித்தவர்! தர்மஸ்தலா புகார்தாரரின் முதல் மனைவி 'திடுக்'
ஏமாற்றுக்காரர்... பொய்யர்... திமிர் பிடித்தவர்! தர்மஸ்தலா புகார்தாரரின் முதல் மனைவி 'திடுக்'
ADDED : ஆக 22, 2025 05:25 AM

மாண்டியா: 'தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரர் திமிர் பிடித்தவர்; பொய்யர்' என, அவரது முதல் மனைவி பரபரப்பு புகார் கூறி உள்ளார்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா கோவில் அருகில், கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக புகார் அளித்தவர் பெயர் மற்றும் அவர் பற்றிய விபரத்தை, சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி., இன்னும் வெளியிடவில்லை.
அந்நபர் முகத்தை மறைக்கும், 'மாஸ்க்' அணிந்து வலம் வருகிறார்.
அவர், ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவத்திற்கு மாறியவர் என்றும், சாம்ராஜ் நகரின் கொள்ளேகாலை சேர்ந்தவர் என்றும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறினார்.
ஆனால், புகார்தாரர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், தர்மஸ்தலா வழக்கில் தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தொடர்பு இருப்பதாகவும், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, 'பகீர்' கிளப்பினார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு ஆஜரான மாண்டியாவின் ராஜு என்பவர், 'தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரரும், நானும் ஒன்றாக வேலை செய்தோம். அவர் கூறியபடி தர்மஸ்தலாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்படவில்லை' என, ஊடகத்தின் முன் கூறினார்.
சோம்பேறி ராஜு அளித்த தகவல்படி, புகார்தாரரின் சொந்த ஊர் மாண்டியா என்பது தெரிந்தது. புகார்தாரர் குறித்து அவரது ஊர் மக்கள் கூறியதாவது:
தர்மஸ்தலா வழக்கு குறித்து புகார் அளித்தவர், எங்கள் ஊர்க்காரர் தான். தர்மஸ்தலா பற்றி அவர் கூறுவது பொய். 25 ஆண்டுகளுக்கு முன், தர்மஸ்தலாவுக்கு வேலைக்கு சென்றார்.
கிராமத்தில் இருந்து யாராவது, தர்மஸ்தலா சென்றால் அவரை பார்த்துவிட்டு வருவோம். ஊரில் இருந்த நிலத்தை விற்றுவிட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தார். வேலைக்கு எதுவும் செல்லவில்லை. சாப்பிடுவது, துாங்குவது தான், அவரது அன்றாட வேலையாக இருந்தது. சோம்பேறியாக மாறினார்.
அவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அவர்கள் எல்லாரும் நல்லவர்கள். இவர் மட்டும் மோசடிக்காரர். மூன்று திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.
பணத்தாசை புகார்தாரரின் முதல் மனைவி கூறியதாவது:
எங்களுக்கு, 1999ல் திருமணம் நடந்தது. ஏழு ஆண்டுகள் வாழ்ந்தோம். ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், ஏழு ஆண்டுகள் தர்மஸ்தலாவில் வசித்தோம்.
நுாற்றுக்கணக்கான உடல்களை புதைத்ததாக அவர் கூறி இருப்பது பொய். பணத்தாசைக்காக இப்படி பொய் சொல்லி இருக்கலாம்.
குடும்ப பிரச்னையால் நாங்கள் விவாகரத்து செய்து விட்டோம். ஜீவனாம்சம் கொடுப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். ஆனால், ஒரு பைசா கூட தரவில்லை.
என் முன்னாள் கணவர் எப்போதும் தன்னை பற்றி பெருமை பேசுவார். அவர் ஏமாற்றுக்காரர், பொய்யர், திமிர் பிடித்தவர்.
தர்மஸ்தலா கோவில் பெயருக்கு களங்கம் விளை வித்ததற்கு, அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர் கொல்லப்பட வேண்டும். அவரது உடலை பார்க்க கூட செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

