*மூடி மறைக்கும் மர்மம்
தொழிற்பூங்கா அமைக்க போவதாக கோல்டு சிட்டி அசெம்பிளிகாரர் பேசி வராரே. நிஜமான சங்கதி என்ன. கூடிய சீக்கிரம் தெரிய தான் போகிறதுன்னு கோலாரின் செங்கோட்டைக்காரர் பொடி வைத்து பேசியதில் ஏதோ உள்நோக்கம் மறைந்திருக்குதுன்னு தெரிகிறது.
சட்ட பிதா மண்டபம் கட்டுவதற்கு சமூக நலத்துறை ஒதுக்கிய இடம், யாருக்கு ஒப்பந்தம் செய்திருக்காங்க; ஏன் இடமாற்றம் செய்யப்பட்டது.
முன்பு இடம் ஒதுக்கி இருந்ததும், தொழிற் பூங்காவுக்கு உரிய இடம் தான். அதனை தவிர்த்து புதியதாக இடத்தை காட்டி இருக்கும் இடமும் தொழிற் பூங்காவுக்கு உட்பட்ட இடம் தானே.
ஏற்கனவே ஒதுக்கீடு செய்த இடத்தை, அசெம்பிளி மேடம், யாருக்கு ரிசர்வ் செய்து வைத்திருக்காங்க. அந்த மர்ம கதையும், எத்தனை நாளைக்கு மூடி மறைக்க முடியும்னு ஜனங்க பேசுறாங்களே.
***
*பாழடைந்த பள்ளி கட்டடம்
முனிசி., அலுவலக ஐம்பது ஆண்டு பழைய கட்டடத்தின் மேல் கூரையில் மழைநீர் ஒழுகுவதால், ஊழியர்கள் வேலை செய்ய கஷ்டப்படுவதை அறிந்த பெரிய ஆபிசரு, அதனை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. இது பாதுகாப்புக்கு நல்ல விஷயம் தான்.
முனிசி., ஆபிசுக்கு புதியதாக கட்டடம் கட்ட, 11 கோடி ரூபாயில் திட்டமிட்டிருக்காங்க. இன்னும் டெண்டர் மட்டுமே விடலயாம். அதுக்காக காத்திருக்காங்க. எப்படியோ ஒருத்தரின் பினாமிக்கு 'சான்ஸ்' கிடைக்க போகுது.
இதே போல அரசு பள்ளி கட்டடம் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ. யார் யாரை பலி வாங்க காத்திருக்குதோ என்ற பயத்தில் டீச்சர்கள் முதல் மாணவர்கள் வரை கிலியோடு இருக்காங்க இதுக்கு வட்டார கல்வி ஆபிசர் 'ஆக் ஷன்' எடுக்கலாமே.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட, எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேணாமா என சிலரது வாதமாக இருக்குது.
***
*ஆம்புலன்ஸ் எங்கே?
கொரோனா காலத்தில் கோல்டு சிட்டிக்கும் கூட சில கோடிகள் வந்ததாக சொல்றாங்க. ஆனால் அப்படி ஒண்ணுமே செலவிட்டதாக தெரியலையே. அந்த தொகையில், எத்தனை பேருக்கு பங்கு போனதோ. கொரோனா பாதிப்பு உள்ளவங்களை தனிமை படுத்தினாங்களே தவிர, வேறென்ன பெருசா உதவினாங்க என்பதை விசாரிக்கணும்.
வெளியூர்களில் கொரோனாவில் இறந்தவங்க உடல்களை எல்லாம் கொண்டு வந்து கோல்டு சிட்டியில் புதைக்கும் இடமாக மாற்றினாங்க. அப்போது பொது அமைப்புகள் எல்லாம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கினாங்க.
தற்போது அவசர சிகிச்சைக்கு கோலார், பெங்களூருக்கு நோயாளிகளை அழைத்து செல்ல அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் இல்லை என்கிறாங்க. ஒருவேளை ஆம்புலன்சுக்கும் கொரோனா ஏற்பட்டு முடங்கிடுச்சோ.
***
'ரேட்' பிக்ஸ்
அரசு மருத்துவமனையில், சூப்பர் கட்டடம் கட்டி முடிச்சாச்சு. ஆனால் இன்னும் ஐ.சி.யு., பிரிவு இயங்கலயே. அதுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கப்போகுதோ.
இப்பவும் கூட பல பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லை என்ற விபரம் அரசுக்கு தெரியுமா, தெரியாதா.
மாரடைப்பு ஏற்பட்டால், முன் பின் யோசிக்காமல் கோலார், பெங்களூருக்கு போக சொல்லி விரட்டி விடுறாங்க. பெயருக்கு மட்டுமே சகல வசதிகளும் உள்ள மருத்துவமனை. ஆனால் ஒண்ணும் சொல்லிக்கிறபடி இல்லையே.
அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் 'ரேட் பிக்ஸ்' செய்றாங்களேன்னு நோயாளிகள் வருந்துறாங்க. இது, லஞ்ச ஊழல் ஒழிப்புக்காரங்க கவனத்திற்கு வரலையா. யாராவது வந்து புகார் செய்தால் தான் அவங்களும் வேலையை செய்வாங்களா அல்லது அவங்களையும் வராமல் தடுக்க சரிகட்டுறாங்களா.
ஊழல் தடுப்பு ஆபிசர்கள் பார்வை, கோல்டு சிட்டி மருத்துவமனை மீது எப்போது படருமோ.

