நில அபகரிப்பு ஆட்டம்!
சீனி., தொகுதியின் ஜகுல்குண்டே இடத்தில் வன நிலத்தை, சட்டம் அறிந்தவரே ஆக்கிரமித் தாருன்னு பரவலான பேசப்படுது.
கோர்ட் வழிகாட்டுதலின் படி அங்கு கூட்டு சர்வே நடத்தினாங்க. இந்த வன எல்லைப்பகுதியில் வில்லங்கம் இருக்குதுன்னு தெரிஞ்சும் கூட, ஆட்சி அதிகாரம் உள்ள கட்சிக்காரர் என்பதால் சட்டத்தை வளைத்திடலாமா.
முடாவில் சிக்கிய முதலானவர், அதிலிருந்து மீண்டு வர வழித்தேடுறாரு. அவரது தோஸ்த்தும் வன நிலத்தில் மாட்டி முழிக்கிறாரு. கோல்டு சிட்டியிலும் 523 ஏக்கர் முறைகேட்டில் யார் யார் சிக்கப்போறாங்களோ. ப.பேட்டையில் ஏரி நிலம், மாலுாரில் குவாரி நிலம் எல்லாமே சட்ட விரோதம் என்கிறாங்க நிஜம் தானா?
கரைந்து போனது!
என்னமோ பெருசா ஏ.பி.எம்.சி., கட்டுவதாக கூறி பல ஏக்கர் தேர்வு செய்தாங்க. அந்த இடத்தில பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் சிக்கிச்சு. இரவோடு இரவாக அதனை வெட்டி எடுத்து, லோடு லோடாக வெளி மாநிலத்துக்கு கடத்தினதா பேசப்பட்டது.
ஆனா, அந்த விவகார பேச்சையே அடக்கிட்டாங்க. விறுவிறுப்பான கதை சப்பென ஆக்கிட்டாங்க. இதில் பெரும் புள்ளிகள் கான்ட்ராக்ட் என்பதால் மூடி மறைச்சிட்டாங்களோ.
தடை உடையுமா?
பூங்காவில் கட்டடங்கள் கட்டக்கூடாதென, சட்டம் உள்ளது. இது தெரிந்தவங்க, எப்படி பல லட்சம் ரூபாய் செலவில் பவன் கட்டடம் கட்டுவதற்கு அரசு நிதியை ஒதுக்கினாங்க. கட்டடம் கட்டி முடிக்கிற வரையில் உறக்கத்தில் இருந்த மகா அறிவாளிகள், கட்டி முடிச்ச பிறகு அதனை திறக்க விடாம, தடை செஞ்சாங்க.
பூங்காவுக்குள் எந்த ஒரு கட்டடமும் இருக்க கூடாதென சட்டம் சொல்வதால், இருக்கும் சட்டப் பிதா சிலைக்கும் ஆபத்தை ஏற்படுத்திட்டாங்க. தடை உத்தரவு இன்னும் விலகாமல் எத்தனை நாட்களுக்கு காத்திருக்குமோ.
விரிசல் சிலைகள்!
கோல்டு சிட்டியில் உள்ள சிமென்ட் சிலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. அதிலும் முனிசி, வளாகத்தில் உள்ள சட்ட பிதா சிலை விரிசலை காட்டுது. மெட்டல் சிலை வைப்பதாக மூன்று ஆண்டுக்கு முன்னாடி தீர்மானம் நிறைவேற்றினாங்களே தவிர, அந்த தீர்மானம் இன்னும் அமல்படுத்தவில்லை.
இதுக்காக '10எல்' ஒதுக்க முடிவு செய்தாங்க. ஆனால் 1 பைசா வேலையும் நடக்கல. இது போல் தான் ஆ.பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து சிலை திறக்கப் படாமலேயே, 25 ஆண்டை கடந்து விட்டது. அந்த சிமென்ட் சிலை கூட, மெட்டல் சிலையாக மாற்றப்படும் எனறு சொன்னாங்க. ஆனால் எதுவும் நடக்கல.
சிமென்ட் சிலைகள் உடைந்த பின் கண்களை கசக்கி கொள்வதை விட, எச்சரிக்கையாக என்ன செய்யப் போறாங்களோ.