பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க எல்லையில் சோதனைச்சாவடி
பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க எல்லையில் சோதனைச்சாவடி
ADDED : ஜன 20, 2025 07:10 AM

சாம்ராஜ் நகர்: ''ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் கை பைகள், குடிநீர் பாட்டில்கள், தட்டுகள், ஸ்பூன்கள் போன்றவை வனப்பகுதிக்குள் வராமல் தடுக்க, வனப்பகுதிக்குள் செல்லும் பாதையில், இரண்டு சோதனைச்சாவடி முறையை விரைந்து செயல்படுத்த வேண்டும்,'' என அதிகாரிகளுக்கு, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டார்.
சாம்ராஜ் நகர் பன்டிப்பூரில் வனத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகம், கேரளா மாநிலங்களை இணைக்கும் கர்நாடகாவின் கேக்கனஹல்லா, முஹோஹோலே, மடூர் கேட், மேலுகமனஹள்ளி கேட் அருகில் தினமும் 30 முதல் 35 கிலோ வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேருகிறது.
வனத்துறையினர் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த செல்லும் போது, வன விலங்குகள் தாக்குதல், பாம்புக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இச்சாலையின் நுழைவு வாயிலேயே பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோன்று இவ்வழித்தடத்தில் இரண்டு இடங்களில் சோதனைச்சாவடி அமையுங்கள். முதல் கட்டத்தில் பெரிய கூடையை வைத்து, வாகனத்தில் இருப்பவர்களிடம், தாமாக முன்வந்து, பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்புகள், தட்டுகள், பைகளை வைக்க சொல்லுங்கள். இரண்டாம் கட்ட சோதனைச்சாவடியில் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து அனுப்புங்கள். அதில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அபராதம் விதிக்க வேண்டும்.
இம்முறை பருவமழை நன்றாக பெய்தாலும், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில், வரும் கோடை காலத்தில் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் தீவனம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, தண்ணீர் சேமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆழ்துளை கிணறுகளில் சோலார் மின் பம்புகளை நிறுவி, தண்ணீர் பாய்ச்சுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.